பழரசமா... பழவிஷமா.. லெமனா.. உயிருக்கு எமனா.. குப்பையில் கொட்டிய அதிகாரிகள்..!
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். புற்றுநோயை உண்டாக்கும் ரசாயண சுவையூட்டிகள் கலந்த பழரசம் மற்றும் லெமன் ஜூஸை லிட்டர் கணக்கில் பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டி அழித்தனர்
வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று நம்பி வாங்கி அருந்தும் பழரசம் மற்றும் லெமன் ஜூஸில் ரசாயண நிற மற்றும் சுவையூட்டிகள் கலப்பதால் , அவற்றை குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரித்து அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் தான் இவை..!
கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன் தலைமையில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் கச்சேரி ரோடு ,சேலம் ரோடு , துருகம் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளிலும் உணவகங்களிலும் திடீர் ஆய்வு மேற்க்கொண்டனர்.
இந்த ஆய்வில் அதிக செயற்கை நிற மூட்டிய பழச்சாறு , லெமன் ஜூஸ் உள்ளிட்ட 75 லிட்டர் குளிர்பானத்தை கைப்பற்றி குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர்
காலாவதியான உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடாத நொறுக்கு தீனிவகைகள் 195 கிலோ, கார வகைகள் 49 கிலோ, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் 25கிலோ , பயன்படுத்த கூடாத நிலையில் உள்ள 20 லிட்டர் குடிநீர் கேன்கள் 24 ஆகியவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது
சுகாதாரமற்ற நிலையிலும் உரிமம் புதுப்பிக்காமலும் பிளாஸ்டிக் நெகிழிகளை பயன்படுத்திய 2 உணவகங்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 4 கடைகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 11 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதிக நிறமூட்டிய குளிர்பானம் எலுமிச்சை பழமே கலக்காமல் லெமன் பவுடரை கலந்து விற்பனை செய்வது அதனை அருந்துபவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்று கடைக்காரர்களை எச்சரித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் இது போன்று சுழற்சி முறையில் அதிகாரிகள் சோதனை செய்து நுகர்வோருக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
Comments