சிக்கிய புதையல்...! ஆடம்பர வாழ்க்கையால் காட்டிக் கொடுத்த ஊர்க்காரர்கள்...!!!
தேன் எடுக்கச் சென்ற போது கிடைத்த தங்க காசுகளையும், புதையல் தங்கத்தையும் விற்று ஆடம்பரமாக வாழத் தொடங்கிய 3 இளைஞர்களை கைது செய்த போலீசார், புதையல் விற்ற காசில் வாங்கிய கார் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பொதலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வெங்கடேஸ்வரலு. நண்பர்களான மூன்று பேரும் வனப்பகுதிக்குள் சென்று தேன் சேகரிப்பதை தொழிலாக கொண்டவர்கள். கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அருகில் உள்ள வனப்பகுதிக்கு தேனெடுக்க சென்றுள்ளனர் இளைஞர்கள் 3 பேரும்.
பழமையான அங்கம்மா கோயில் அருகே பாறைகளுக்கு இடையே குடம் ஒன்று பாதி வெளியில் தெரிந்த நிலையில் இருப்பதை கண்டனர் இளைஞர்கள். இது மட்டும் புதையலாக இருந்தால் எப்படி இருக்கும் என அவர்களுக்குள் பேசிக் கொண்ட இளைஞர்கள், சரி தோண்டி தான் பார்ப்போமே என நினைத்து அந்த குடத்தை மண்ணிலிருந்து தோண்டி வெளியே எடுத்தனர்.
அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் குடத்தில் தங்க காசுகளும், தங்க நகைகளும் புதையலாகவே அவர்களுக்கு கிடைத்தது. மகிழ்ச்சியில் உச்சத்திற்குச் சென்ற அவர்கள் கிடைத்த புதையலால் திக்குமுக்காடிப் போனார்கள். பழமையான பொருட்களோ அல்லது புதையலோ கிடைத்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி அவர்கள் அந்த புதையலை தங்களுடனே வைத்துக் கொண்டனர்.
குடத்தில் இருந்த தங்கத்தின் ஒருபகுதியை சென்னைக்கு எடுத்து வந்த இளைஞர்கள் அதனை விற்று பணமாக்கினர். அந்த பணத்தில் கார் மற்றும் ஆட்டோ வாங்கியதோடு, உல்லாசமாக சுற்ற ஆரம்பித்தனர்.
தேன் சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருபவர்கள் திடீர் வசதி, வாய்ப்புகளுடன் சுற்றத் துவங்கியதும், ஊர்க்காரர்களுக்கு சந்தேகம் வரத் துவங்கியது.
தங்களது வேலையை விட, இளைஞர்கள் 3 பேரும் திடீர் பணக்காரர் ஆனது எப்படி என்ற விசாரணையில் இறங்கியவர்கள், ஒருவழியாக புதையல் கிடைத்த ரகசியத்தை தெரிந்துக் கொண்டனர். உடனடியாக, இந்த தகவலை போலீஸாருக்கும் தெரியப்படுத்தினர் ஊர்மக்கள்.
இளைஞர்களிடம், போலீஸார் நடத்திய விசாரணையிலும் புதையல் கிடைத்திருப்பது உறுதியானது. இதனையடுத்து, புதையல் தங்கம் எங்கே எனக் கேட்ட போது அவர்கள் சென்னையில் அதனை விற்று காசாக்கியது தெரிய வந்தது.
உடனடியாக சென்னைக்கு விரைந்த போலீஸார், பழமையான நாணயங்களை வாங்கிய அந்த நபரிடம் இருந்து 14 லட்ச ரூபாய் பணம், 21 பவுன் தங்க ஆபரணங்கள், 436 சிறிய வகை தங்க நாணயங்கள், 63 பெரிய தங்க நாணயங்களை கைப்பற்றினர். திடீர் பணக்காரர்கள் ஓட்டி வந்த கார் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர் போலீஸார்.
புதையலின் அளவு எவ்வளவு என்பது தெரியாததால் புதையல் இருந்த குடம் எங்கே என விசாரணை நடத்தினர் போலீஸார். அந்த குடத்தை அங்குள்ள ஏரியில் வீசியதாக தெரிவித்தனர் இளைஞர்கள்.
ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 10 பேரை அழைத்து வந்து தேடுதல் வேட்டை நடத்தி அந்த குடத்தையும் கைப்பற்றினர் போலீஸார்.
காசு, பணம், துட்டு, மணி... மணியென ஜாலியாக வாழ்ந்த இளைஞர்கள் 3 பேரும் இப்போது போலீஸாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர்.
Comments