நேர்மையான பிரதமர் மோடியின் அரசு மீது ஊழலின் அடையாளமான தி.மு.க., வீண் பழி சுமத்துவதை, மக்கள் ஏற்கமாட்டார்கள் - அண்ணாமலை
நேர்மையான பிரதமர் மோடியின் அரசு மீது ஊழலின் அடையாளமான தி.மு.க., வீண் பழி சுமத்துவதை, மக்கள் ஏற்கமாட்டார்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சி.ஏ.ஜி. அறிக்கையால் மத்திய அரசின் 7 வித ஊழல் அம்பலமானதாக முதலமைச்சர் அப்பட்டமான பொய்யை கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளது என்று தான் கூறியிருப்பதாகவும், ஊழல், முறைகேடு போன்ற வார்த்தைகள் எந்த இடத்தில் இருந்தது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் கனிம வளங்களை கடத்தி, கேரளாவுக்கு அனுப்புவதில் தி.மு.க. அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பது மக்களுக்கே தெரியும் என கூறிய அவர், கனிம வளங்களை திருடுவோர் மீது முதலமைச்சர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநகராட்சி பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில் தமிழகத்தின் தலைநகரை தி.மு.க. வைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு என்று கூறுவது, வானத்தைப் பார்த்து உமிழ்வதைப் போன்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், 2ஜி ஊழல் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கையை நாட்டு மக்கள் எளிதாக மறக்க மாட்டார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Comments