மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் லக்னோ கொண்டு செல்லப்பட்டன.. !!

0 1054

மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லக்னோ கொண்டு செல்லப்பட்டன.

முன்னதாக மதுரையில் 9 பேரின் உடல்களுக்கும் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட உடல்களோடு, ரயிலில் பயணம் மேற்கொண்ட 14 பேர் சென்றனர். மீதமுள்ள 41 பேர் மதுரையிலிருந்து விமானம் மூலம் லக்னோ அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே விபத்து நிகழ்ந்த பெட்டியில் இரண்டாவது நாளாக தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ட்ரங்க் பெட்டி ஒன்றிலிருந்து கருகிய நிலையில் கட்டுக்கட்டாக 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

தெற்கு வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினரும் பெட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது ஒருபுறமிருக்க, ரயிலில் வந்தவர்களில் 5 பேர் எண்ணிக்கையில் குறைந்ததால், அவர்கள் குறித்து விசாரித்தபோது, வேறு ரயில் பிடித்து லக்னோ செல்ல முயன்றது தெரியவந்தது.

அவர்களில் பிளாட்பார்மில் சுற்றித் திரிந்த 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மீதமுள்ள இரண்டு பேர் ரயிலில் சொந்த ஊர் சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments