சந்திரயான்-3 வெற்றி : விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய போது நா தழுதழுத்த பிரதமர்..!
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கே நேரில் சென்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களை நா தழுதழுக்க பாராட்டினார்.
ஏதென்சில் இருந்து நேராக பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்தது பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானம்! ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து இஸ்ரோ தலைமையகம் வரை பிரதமருக்கு தேசியக் கொடிகளை அசைத்து ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.
சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த மக்களின் வரவேற்பை காரின் கதவை திறந்து நின்றபடி பிரதமர் ஏற்றுகொண்டார்.
விண்வெளி ஆய்வு மைய வாயிலில் தம்மை வரவேற்ற இஸ்ரோ தலைவர் சோமநாத்தை முதுகில் தட்டிக்கொடுத்து பிரதமர் மோடி பாராட்டினார். பின்னர் விஞ்ஞானிகளுடன் இணைந்து குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பிரிந்து சென்று நிலவில் செயல்படுவது குறித்து அதன் மாதிரியை காட்டி பிரதமருக்கு சோமநாத் விளக்கிக் கூறினார்.
இஸ்ரோ மையத்தில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் கைதட்டி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 மினியேச்சரை திட்ட இயக்குனர் வீர முத்துவேல் பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
விஞ்ஞானிகள் இடையே உரையாற்றிய பிரதமர், சந்திரயான் 3-இல் லேண்டர் தடம் பதித்த ஆகஸ்ட் 23ஆம் நாள் இனி தேசிய விண்வெளி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்றும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதி 'சிவசக்தி' என அழைக்கப்படும் என்றும் அறிவித்தார். சந்திரயான் - 2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் விழுந்த இடம் 'திரங்கா' என இனி அழைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை சந்திரயான் - 2 நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்றுத்தந்த விஞ்ஞானிகளுக்கு சல்யூட் என்று பிரதமர் நா தழுதழுக்க கூறினார். பின்னர், பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டு தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய பெண் விஞ்ஞானிகள் குழுவையும் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
Comments