2.0 வை எட்டிப்பிடிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. 14 நாட்களில் ரூ 525 கோடி வசூல்
தமிழ் திரை உலக வரலாற்றில் முதல் முறையாக வெளியான 14 நாட்களில் 525 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம்.
டைகர் முத்துவேல் பாண்டியன்.... சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் உலக அளவில் வசூலை வாரிக்குவித்து வருவதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் ஜெயிலர் படம் 14 நாட்களில் 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது
தமிழ் திரை உலக வரலாற்றில் அதிக வசூல் செய்த நேரடி தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ரஜினிகாந்த் - அக்ஷய்குமார் இணைந்து நடித்த 2.ஓ 800 கோடி ரூபாய் வசூலுடன் தக்கவைத்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் 450 கோடியுடனும், விக்ரம் திரைப்படம் 414 கோடி ரூபாயுடனும், பொன்னியின் செல்வன் 2 வது பாகம் 345 கோடிகளுடனும் அடுத்தடுத்த இடங்களை தக்க வைத்திருந்தது. 2.0 தவிர்த்து மற்ற திரைப்படங்களின் வசூல் சாதனைகளை ஜெயிலர் வெளியான பத்தே நாட்களில் அடித்து துவம்சம் செய்தது. தமிழ் திரைஉலகில் 500 கோடிகளுக்கும் அதிகமான வசூல் சாதனை செய்த 2 படங்களும் ரஜினியிடம் மட்டுமே உள்ளது.
படம் வெளியாகி சரியாக 2 வாரங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஜெயிலர் தமிழகத்தில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்து விக்ரம் வசூலை முந்தியதாக கூறப்படுகின்றது. போர்தொழில் போன்ற சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றிக்கு உதவிய சினிமா விமர்சகர்கள் , பெரிய பட்ஜெட் படங்களை வன்மத்தோடு பாரபட்சமாக விமர்சித்தால் அது நல்ல திரைப்படங்களை பாதிக்காது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஜெயிலரின் மகத்தான வெற்றி என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்
Comments