பள்ளிக்கு வந்தா மட்டும் போதும்.. காலையில் காத்திருக்கும் உணவு லிஸ்ட்டு இதுதான்..!
முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக் கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் முதல் நாளில் கிச்சடி பொங்கல் சாம்பாருடன் இனிப்பான கேசரி காலை உணவாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 31 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் 17 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை முதல் அமைச்சர் முகஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் , அருகில் அமர்ந்திருந்த சிறுவனிடம் கையில் கட்டி இருந்த கடிகாரம் குறித்து வேடிக்கையாக உரையாடினார்
பெரும்பலான ஊர்களில் ரவா கிச்சடி, பொங்கல்,சாம்பாருடன் இனிப்பாக கேசரி வழங்கப்பட்டது.
திங்கட்கிழமைகளில் ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமைகளில் கோதுமை ரவா கிச்சடியுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமை அரிசி உப்புமாவுடன் சாம்பாரும், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசியில் அம்பேத்குமார் எம்.எல்.ஏ பள்ளிச்சிறுமிக்கு உணவு ஊட்டி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியினர் உணவு கொடுப்பது போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்ததால் எதிர்வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு உணவு வைக்கப்படவில்லை. வெறும் தட்டுடன் காத்திருந்தவர்களுக்கு உணவு வைக்க அறிவுறுத்தினார்
ஆரணியில் குழந்தைகளுடன் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த திமுகவினர் உணவை தட்டில் வைத்து விட்டு எழுந்து சென்றனர்
குன்றத்தூரில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட கிச்சடி சூடாக இருந்ததால் மாணவிகள் சிலர் சாப்பிட இயலாமல் தவிப்பதை கண்ட திமுக பெண் கவுன்சிலர்கள் அவர்களுக்கு அருகில் அமர்ந்து தாய் போல உணவை ஊட்டி விட்டனர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இருவகையான காலை உணவு வழங்கப்பட்டது.
எடப்பாடி ஏரிரோடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிச்சடி , கேசரியுடன் லட்டு மற்றும் மிக்ஸரும் சேர்த்து வழங்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அடுத்த ஆறுபாதி அரசு பள்ளியில் காலை உணவுதிட்டத்தை தொடங்கி வைத்த மாற்றுத்திறனாளியான மாவட்ட ஆட்சியர் , ஸ்பூன் மூலம் மாணவருக்கு உணவை ஊட்டினார்
திட்டக்குடியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சி.வி.கணேசன் ஒரு மாணவிக்கு அளவுக்கு அதிகமான சேமியா கிச்சடியை வாயில் ஊட்டியதால் , அந்த மாணவி தவித்துப்போனார்
ஒரு மாணவியிடம் பாயாசம் எப்படி இருந்தது என்று அமைச்சர் கேட்ட நிலையில் , அந்த மாணவி பாயாசம் சாப்பிடவில்லை என்றதும் ஒரு பேப்பர் கப்பில் பாயாசத்தை ஊற்றி மாணவியை குடிக்க வைத்தார்
தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவு பரிமாறியபோது ஒரு மாணவன் தனக்கு வேண்டாம் என்று கூற, கேசரி பிடிக்காதா ? இந்தா கொஞ்சமாக சாப்பிடு என்று செல்லமாக கூறினார்
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
Comments