விஜயகாந்தின் பிறந்த நாளில் 5000 பேருக்கு அசைவ விருந்து கண்கலங்கிய பெண் தொண்டர்கள் ..!
71 வது பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்கள் முன் தோன்றினார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவரை நேரில் பார்த்த உற்சாகத்தில் தொண்டர்கள் கையை உயர்த்தி கோஷமிட்ட நிலையில், கையை அசைப்பதற்கே கஷ்டப்பட்டதாக விஜயகாந்தை கண்டு பெண் தொண்டர்கள் கண்கலங்கினர்.
கேப்டனுக்கு என்னாச்சி.... அவர எப்போது பார்ப்போம் என்று ஏங்கிக்கிடந்த தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது 71 வது பிறந்த நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் முன் தோன்றினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!
அவரை பார்த்த உற்சாகத்தில் செல்போனில் வீடியோ எடுத்த படி தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்
தொண்டர்களை நோக்கி கை அசைக்க முயன்ற விஜயகாந்தால் கைகளை தூக்க இயலவில்லை, அருகில் நின்ற அவரது மனைவி பிரேம லதாவும், மகன் விஜய பிரபாகரனும் ஆளுக்கொரு கையை தூக்கிப்பிடிக்க அவர் கட்டை விரலை உயர்த்தி காட்டினார்
சினிமா சண்டைக்காட்சிகளில் சுவற்றில் எட்டு வைத்து வில்லன்களை எட்டி மிதிக்கும் ஆக்சன் ஹீரோவாக பார்த்த தங்கள் தலைவரை, வீல் சோபாவில் அமர வைத்து அழைத்து வருவதையும் , தானாக கையை தூக்க இயலாத நிலையில் உள்ள தங்கள் தலைவரை கண்டு கண்கலங்கிய பெண் தொண்டர்கள் ஒரு கட்டத்தில் அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டனர்
தான் எந்த நிலையில் இருந்தாலும் தன்னை பார்க்க வந்தவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் விஜயகாந்தை போலவே அவரை சார்ந்தவர்களும் உறுதியாக இருப்பதால் 5000 பேருக்கு சிக்கன் மட்டன் மீன் குழம்புடன் அசைவ விருந்து பறிமாறப்பட்டது
தொண்டர்களை கையில் தட்டை ஏந்தவிடாமல், தலைவாழை இலைபோட்டு பந்தியுடன் இந்த விருந்து வைத்தனர் தேமுதிகவினர்.
அமர்ந்து சாப்பிடாத தொண்டர்களுக்கு கையோடு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது
விஜய்காந்தின் பிறந்த நாளை ஏழை எளியோருக்கு பசியாற சாப்பாடு போட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வறுமை ஒழிப்புதினமாக கொண்டாடுவதாக அறிவித்த பிரேமலதா, கேப்டனின் உடல் நிலை குறித்து எந்த வதந்திகளையும் பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்
தன்னைக்காண காத்திருந்த கண்களை கலங்க வைத்தாலும் ... எப்போதும் போல தன்னை தேடி வந்தவர்களுக்கு வயிறார உணவிட்டு அனுப்பி வைத்திருக்கிறார் விஜயகாந்த் என்று தலைவரை பார்த்த உற்சாகத்தில் தேமுதிகவினர் கூறிச்சென்றனர்
Comments