குடும்பத்தையே அழித்த ஆன் லைன் ரம்மி ஊதாரி இரு மகள்கள் கொலை..! மனைவியை மாதிரியே தற்கொலை

0 2962

சென்னையில் கடனுக்கு மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை வைத்து சூதாடி கடனாளியான ஊதாரி ஆசாமி ஒருவர், 2 வது மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். 3 வருடங்களுக்கு முன்பு மனைவியுடன் சேர்ந்து முதல் மகளை கொலை செய்த வழக்கில் சிக்கியவரால் குடும்பமே அழிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் 52 வயதான கீதா கிருஷ்ணன் . இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மைபணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவரது வீட்டிற்கு ஓட்டேரியைச் சேர்ந்த லட்சுமிபதி என்பவர் சென்றுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது கீதா கிருஷ்ணன் தூக்கிட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த அயனாவரம் போலீசார் கீதா கிருஷ்ணன் மற்றும் அவரது மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்திய போது அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி ஊதாரித்தனமாக ஆன் லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் குடும்பமே அழிந்த சோக சம்பவம் தெரியவந்தது. கோட்டூர்புரத்தில் வசித்து வந்த கீதா கிருஷ்ணன், கடந்த 2005ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிய கல்பனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குணாலிஸ்ரீ மற்றும் மானசா ஆகிய இரு மகள்கள் இருந்து வந்த நிலையில் கீதா கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுப்பட்டு பல பேரிடம் கடன் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

இதனால் மனைவி கல்பனாவுக்கும், கீதா கிருஷ்ணனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், கடன் கொடுத்தோர் திருப்பிக் கேட்டதால் நெருக்கடி அதிகரித்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். முதலில் கீதா கிருஷ்ணன் , தனது மூத்த மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அடுத்ததாக மனைவி கல்பனா தூக்கிட்டு துடிப்பதை கண்ட கீதா கிருஷ்ணன் தற்கொலை முடிவிலிருந்து மனம் மாறி இளைய மகள் மானசாவுடன் திருப்பதிக்கு தப்பிச்சென்றார்.

மீண்டும் சென்னை திரும்பிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கீதா கிருஷ்ணன் மூன்று மாத சிறைத்தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தபின்னர் 2 வது மகள் மானசாவுடன் அயனாவரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தொடர்ந்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனை அடைத்து வந்துள்ளார். தனக்கு சொந்தமான வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு லீசுக்கு விடுவதாக கூறி ஏமாற்றி இரண்டரை லட்சம் ரூபாய் பெற்று கொண்ட கீதா கிருஷ்ணன் வீட்டை லீசுக்கு விடவில்லை என்றும் கூறப்படுகின்றது. லட்சுமிபதி பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்க மறுத்து வந்த நிலையில் தான் , 2 வது மகளை கொலை செய்த கீதா கிருஷ்ணன் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்

ஆன் லைன் ரம்மி சூதாட்ட மோகத்தால் கடனுக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பிச்செலுத்த இயலாமல் சிக்கிக் தவித்து, இரு மகள்களை கொலை செய்து மனைவியையும் தற்கொலைக்கு தூண்டி இறுதியில் தானும் உயிரை மாய்த்துள்ளார் இந்த ஊதாரி ஆசாமி என்கின்றனர் காவல்துறையினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments