சந்திரனை அடுத்து சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரோ..! என்ன செய்யப் போகிறது ஆதித்யா-எல் 1..?

0 4584

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். சுட்டெரிக்கும் நெருப்புக் கோளில் இந்தியா என்ன ஆய்வு நடத்தப் போகிறது என்ற கேள்விக்கு பதில் தருகிறது இந்தத் தொகுப்பு.

கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பு தான் பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள நட்சத்திரங்களை ஆராய்வது அத்தியாவசியமானது. எனவே தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆய்வு செய்ய உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

பூமியை உள்ளடக்கிய ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தின் சக்திக்கும் மூலமாக விளங்குவது சூரியன். 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படும் சூரியன், பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனின் சில பகுதிகளில் தீவிர அணுக்கரு இணைவு ஏற்பட்டு பெருமளவில் வெடிப்பு உண்டாகி, சூரியப் புயல்கள் உருவாகின்றன. பூமியைச் சுற்றி வளிமண்டலமும் காந்தப்புலமும் இருப்பதால் சூரிய புயல்கள் பூமியை நேரடியாக அடைவதில்லை.

அதே சமயம், வானில் உள்ள செயற்கைக்கோள்களுக்கும், தரையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புகளுக்கும் சூரியப் புயலால் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே, சூரியப் புயல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது அவசியம்.

சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக பூமியில் பல ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ஆனால் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சூரியனை முழுயாக அவற்றால் ஆய்வு செய்ய முடியாது. சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய, பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லவேண்டும். அதே சமயம், குரோமோஸ்ஃபியர் என்று அழைக்கப்படும் சூரிய மேற்பரப்பின் வெப்பநிலை 15 லட்சம் டிகிரி செல்சியஸ் என்பதால் அந்த நிலையில் எந்த உயிரும் வாழ முடியாது. உலோகங்களும் உருகி விடும். இதனால் சூரியனில் விண்கலத்தை தரையிறங்க இயலாது.

ஒரு கோள் எந்தளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அதன் ஈர்ப்பு விசையும் அந்தளவு அதிகமாக இருக்கும். சூரியன் பூமியை விட 3 லட்சத்து 33 ஆயிரம் மடங்கு பெரியது என்பது விஞ்ஞானிகளின் கணக்கீடு. சூரியனின் ஈர்ப்பு விசை, பூமியை விட 27.9 மடங்கு அதிகம். ஒரு அளவுக்கு மேல் நெருங்கிப் போனால், விண்கலத்தை சூரியன் தன் பக்கம் இழுத்து பொசுக்கிவிடும். அகலாது, அணுகாது தீக்காய்வார் போல்க என்று திருவள்ளுவர் சொன்னதைப் போல, சூரியனுக்கு மிக நெருக்கமாகவும் செல்லாமல், தொலைவாகவும் இல்லாத புள்ளியையும் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஈர்ப்பு விசைகளை சமநிலைப்படுத்தும் புள்ளிக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

விண்ணில் உள்ள எந்த இரண்டு கோள்களுக்கும் நடுவே, இரண்டின் ஈர்ப்பு விசையும் பூஜ்ஜியமாக உள்ள ஒரு சில இடங்கள் உண்டு. அவற்றை லெக்ரேஞ்சியன் புள்ளிகள் என்று விஞ்ஞானிகள் அழைப்பார்கள். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகளில், முதலாவது புள்ளி தான் சூரியனை ஆய்வு செய்வதற்கு வசதியானது. எல்-1 என்று அழைக்கப்படும் அந்த புள்ளிக்கு ஆதித்யாவை அனுப்ப முடிவு செய்துள்ளது இஸ்ரோ. அதனால் தான் திட்டத்திற்கு ஆதித்யா எல்-1 என்று இஸ்ரோ பெயர் சூட்டியுள்ளது.

எல்-1 புள்ளி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு, அதாவது சூரியனில் இருந்து சுமார் ஒன்றரை கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனினும், அந்தப் புள்ளியில் நிலையான ஈர்ப்பு விசை இருப்பதால் பூமியினாலோ, சூரியனாலோ ஈரத்துக்கொள்ளப்படும் நிலை ஏற்படாது. ஒவ்வொரு கணமும் சூரியனை நேரடியாக கவனித்து ஆய்வு செய்யவும் சூரியப் புயல்களை முன்கூட்டியே கண்டறியவும் வசதியான புள்ளியாகவும் இது கருதப்படுகிறது.

ஆதித்யா எல்-1-இல் சக்திவாய்ந்த ஏழு கருவிகளை பொருத்தி அனுப்ப இருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது. இவை சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கிருந்து பெரிய அளவில் வெளிப்படும் நிறை, மூலக்கூறு மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்கும். மேலும், சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது என்ற வழிமுறை, சூரியனைச் சுற்றியுள்ள காந்தப்புலம், அவற்றின் இயக்கவியல் போன்றவற்றையும் ஆதித்யா எல்-1 கருத்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து ஏவப்படுவதில் இருந்து நான்கு மாத கால பயணம் மேற்கொண்டு எல்-1 புள்ளிக்குள் ஆதித்யா-எல் 1 நுழையும் என்று கருதப்படுகிறது. அதன் பின்னர், சூரியப் புயலின் துகள் பரிசோதனை, எல்-1 புள்ளி அருகே உள்ள நிலை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை இஸ்ரோவுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தனித்தனியாகவும், கூட்டாகவும் ஏற்கனவே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்த வரிசையில், சூரியனை ஆராய்வதற்காக விண்கலம் அனுப்பும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments