வெற்றிகரமாக சாஃப்ட் லேண்டிங் செய்து வரலாறு படைத்த 'விக்ரம்' லேண்டர்... சாதனை படைத்த இந்தியா..!

0 2153

சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக சாஃப்ட் லேண்டிங் செய்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

41 நாள் பயணம் மேற்கொண்டு நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கையை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி மாலை சரியாக 5-44 மணிக்கு துவங்கினர்.

5-48 மணிக்கு லேண்டரின் 4 கால்களில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டு வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியது. இதன் மூலம் விண்கலத்துக்கு மேல் நோக்கி தள்ளுவிசை கிடைத்து வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து தரையிறங்க வசதியாக, லேண்டரின் கால்கள் சுமார் 50 டிகிரி அளவுக்கு கீழ் நோக்கி திருப்பப்பட்டு தொடர்ந்து நிலவை நோக்கி பயணித்தது.

வேகம் படிப்படையாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி தொடர்ந்து பயணித்த விக்ரம் லேண்டர், 3-வது கட்டத்தில் தரையிறங்கும் வகையில் செங்குத்தாக திருப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, லேண்டரில் உள்ள ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவி நிலவின் மேற்பரப்பில் இடையூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்தது.

லேண்டர் நிலவை நெருங்க நெருங்க எடுத்துக் கொண்டே சென்ற படங்களை ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ள படங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான பாதையைக் கண்டறிந்து செயற்கை நுண்ணறிவு லேண்டரை துல்லியமாக இயக்கிச் சென்றது.

அடுத்தகட்டமாக லேண்டரின் 2 எஞ்சின்கள் மட்டும் இயக்கப்பட்டு விக்ரம் லேண்டரின் வேகம் முற்றிலுமாக குறைக்கப்பட்டது.

நிலவில் இருந்து 10 மீட்டர் உயரத்தை எட்டியதும், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பின் மீது மாலை 6-04-க்கு வெற்றிகரமாக தரையிறங்கியது.

விஞ்ஞானிகளின் வெற்றி ஆரவாரத்துக்கு இடையே லேண்டர் தரையிறங்கியதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநரான விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், நிலவின் தென் துருவத்துக்கு அருகே சென்றுள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான்-3-இன் சாஃப்ட் லேண்டிங்கை நேரடியாக பார்வையிட்டார். லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதும் விஞ்ஞானிகளை பிரதமர் பாராட்டினார்.

சாஃப்ட் லேண்டிங்கின் போது நிலவின் மேற்பரப்பில் எழும்பிய புழுதி மண்டலம் மெல்ல ஓய்ந்த பிறகு, 4 மணி நேரத்துக்குப் பின் லேண்டர் திறந்து அதன் இருந்து சாய்வு தளம் கீழே இறங்கியது. அந்த தளத்தின் வழியாக பிரக்யான் ரோவர் ஊர்ந்து நிலவின் மேற்பரப்பை அடைந்தது.

அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பில் சுற்றித் திரிந்து ரோவரும், தரையிறங்கிய இடத்தில் இருந்தபடி லேண்டரும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments