சந்திரயான்-3-க்கு உதவிய நாமக்கல் மாவட்ட மண்..!

0 2631

விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதை பரிசோதிக்க உதவிகரமாக அமைந்துள்ளது, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண். அதன் பங்களிப்பை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

நிலவின் மேற்பரப்பில் இரண்டு வகையான பாறைகள் உள்ளன. அவை அனார்தசைட் மற்றும் பேசால்ட் வகை பாறைகளாகும். குறிப்பாக, தென் துருவத்தில், சந்திரயான்-3 தரையிறங்கும் பகுதிகளில் உள்ளவை அனார்த்சைட் பாறைகள். 1970-களில் அப்போலோ நிலவுக்கு அனுப்பப்பட்ட போது, அங்கு அனார்தசைட் பாறைகள் இருப்பதை சர்வதேச விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டனர். இஸ்ரோ சந்திராயன்-2-ஐ அனுப்ப திட்டமிட்ட போது அனார்த்சைட் மண் மாதிரியை அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. அப்போது, சந்திரயான்-2 திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மூலம் இந்தியாவிற்குள்ளேயே நிலவின் மாதிரி மண்ணை தேடலாம் என தெரிவித்தார்.

மும்பை ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வந்த புவி தகவல் கோளியல் மைய ஆராய்ச்சியாளர் அன்பழனின் தலைமையிலான குழுவும் இஸ்ரோவின் மண் சார்ந்த விஞ்ஞானிகளும் இணைந்து நாடு முழுவதும் ஆய்வுகளில் ஈடுபட்டனர். அதில், நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள மண்ணுடன், நிலவின் மண் 99 சதவீதம் ஒத்துப்போகிறது என்பது 2004-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

1950-களிலேயே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதியில் அனார்தசைட் வகையான பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்போது இந்தியா நிலவு தெடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடாததால் சித்தம்பூண்டியின் மண் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. 2004-இல் விஞ்ஞானிகள் குழு கண்டறிந்த பின் சந்திரயான் திட்டங்களுக்கு சித்தம்பூண்டி மண்ணை பயன்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2012-13 ஆம் ஆண்டில் சித்தம்பூண்டியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகள் சேலத்தில் உள்ள ஒரு குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அளவிற்கு இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தனர்.

சித்தம்பூண்டியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் - 2 விண்கலத்தை இறக்கி சோதனை பார்த்து பிறகு நிலவை நோக்கி அனுப்பினர். தற்போது சந்திராயன்-3 விண்கலத்தையும் அந்த மாதிரி மண்ணில் பலமுறை சோதனை செய்த பிறகே அனுப்பி வைத்துள்ளனர்.

சித்தம்பூண்டி மண் மூலம் சந்திரயான் திட்டத்தின் பட்ஜெட்டை வெகுவாக குறைத்துள்ளனர், இஸ்ரோ விஞ்ஞானிகள். இதன் மூலம் சந்திரயானின் வெற்றிக்கு சித்தம்பூண்டியும் பங்களிப்பை ஆற்றியுள்ளது.‘

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments