நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி இணைந்து மதுரை தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அப்போது நீட் தேர்வால் இறந்த மாணவ, மாணவிகள் பற்றிய வீடியோ ஒன்று ஒளிபரப்பட்டது. அதைப் பார்த்து உதயநிதி உள்ளிட்டோர் கண்கலங்கினர்.
உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் அது தான் என்றும் கூறினார்.
இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற உண்ணாவிரத்தில் அமைச்சர் பொன்முடியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக எம்பி திருச்சி சிவா தலைமையிலும், திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் தலைமையிலும் திமுகவினர் பங்கேற்றனர்.
Comments