மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோலாகலமாக நடந்தது அதிமுக பொன்விழா மாநாடு.!
மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோலாகலமாக நடந்தது.
மதுரை வலையங்குளத்தில் நேற்று மாநாடு நடைபெற்ற திடல் முழுவதும் பெருந்திரளான அதிமுக தொண்டர்கள் நிறைந்திருந்தனர். அவர்களின் ஆரவார குரல்களுக்கு நடுவே எடப்பாடி பழனிசாமியின் கார் கொடிக்கம்பத்தை நோக்கிச் சென்றது. மாநாட்டுத் திடலில், கட்சித் துவங்கி 51 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கொடிக்கம்பத்தில்,கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
அப்போது, வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் பன்னீர் ரோஜா இதழ்களைத் தூவிய நேரத்தில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து சென்னையில் இருந்து துவங்கி தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட தொடர் ஓட்ட ஜோதி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொண்டர் வெள்ளத்தில் மிதந்தபடி மாநாட்டு பந்தல் நோக்கி வாகனத்தில் சென்ற எடப்பாடி பழனிசாமி, மாநாட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சியை விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேடையில் நடந்த கலைநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒயிலாட்டம் ஆடினர்.
இதைத் தொடர்ந்து மாநாட்டின் சிறப்பிதழை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மாநாட்டு வந்திருந்த சர்வ சமயத் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை வழங்கினர். விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்துக்காக முதல் கையெழுத்து போடப்படும் என்று சொன்ன நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அதை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
13 ஆண்டு காலம் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த போதும் கச்சத்தீவை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று வினவியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு ஆபத்து வந்திருப்பதால் கச்சத்தீவை மீட்போம் என்று பொய்யான வாக்குறுதியை ஸ்டாலின் வழங்கி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை உச்சநீதிமன்றம் வரை சென்று அ.தி.மு.க. தொடர்ந்து நடத்தும் என்று கூறியுள்ள இ.பி.எஸ்., அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தி.மு.க. அரசு தொடுக்கும் பொய் வழக்குகள் சட்டப்படி எதிர்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், தமிழ் உள்ளிட்ட அனைத்து அட்டவணை மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக கொண்டு வர வேண்டும் என்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதி மேலாண்மை குழு விதிகளை மீறி தி.மு.க. அரசு 2 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவிலேயே முதன்மை கடனாளி மாநிலமாக தமிழகத்தை மாற்றியதாக அ.தி.மு.க. மாநாடு கண்டனம் தெரிவித்தது.
கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அ.தி.மு.க., விளைநிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி.யின் முயற்சிக்கு மாநில அரசு துணை நிற்பதாக குற்றஞ்சாட்டியது. 2024 தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் அ.தி.மு.க. மதுரை மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
Comments