டவர்ஃபேன் வச்சிருக்கீங்களா..? காயில் எரிந்து புகையில் சிக்கி 4 பேர் பரிதாப பலி..! தூக்கத்தில் நிகழ்ந்த சோகம்

0 5178

சென்னை மணலியை அடுத்த மாத்தூரில் சொமட்டோ ஊழியர் வீட்டில்  நள்ளிரவில் ஓடிக் கொண்டிருந்த டவர் ஃபேன் காயில் எரிந்து உருவான புகையில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 4 பேர் மூச்சுத்திணறி பலியாயினர்.

மின்சாதனங்கள் எரிந்து வீட்டிற்குள் மண்டிய புகையால் 4 பேர் மூச்சுத்திணறி பலியான நிலையில் உறவினர்கள் கதறி அழுத கண்ணீர் காட்சிகள் தான் இவை..!

சென்னை மணலியை அடுத்த மாத்தூரை சேர்ந்தவர் உடையார். தென்காசி மாவட்டம் கடைய நல்லூரை அடுத்த ஆம்பூரை பூர்வீகமாக கொண்ட இவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கு வசித்து வந்தார்.

சொமோட்டாவின் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்த உடையார் சில தினங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கியதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மனைவி செல்வி உடனிருந்து கவனித்து வரும் நிலையில் வீட்டில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக சொந்த ஊரில் இருந்து உடையாரின் தாயார் சந்தான லட்சுமி வந்திருந்தார்.

சம்பவத்தன்று இரவு சந்தான லெட்சுமியின் பேரக்குழந்தைகளான சந்தியா, பிரியா லட்சுமியுடன் விளையாட எதிர் வீட்டில் வசித்து வரும் உறவினரின் மகளான பவித்ரா வந்துள்ளார். விளையாடிய பின்னர் அவர்களுடனேயே அந்த சிறுமியும் அயர்ந்து உறங்கி விட்டார்.

காலையில் வெகு நேரமாக அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத நிலையில் வீட்டுக்குள் இருந்து புகைச்சல் வாசனை வீசியதை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது மின்சாதனங்கள் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டது. படுக்கை அறைக்குள் சந்தான லெட்சுமியும் 3 சிறுமிகளும் கரி படிந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இதனை கண்டு பவித்ராவின் தாய் உள்ளிட்டோர் கதறி அழுதனர்

சம்பவ இடத்துக்கு வந்த மணலி போலீசார் , 4 பேரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆம்னி வேனில் ஏற்றிச்சென்றனர். போலீசாரின் விசாரணையில் இந்த உயிரிழப்புக்கு வீட்டில் இருந்த மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் உண்டான கரும்புகை காரணம் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதலில் மின்கசிவு காரணமாக டவர் ஃபேனில் காயில் தீப்பிடித்து எரிந்ததாகவும், அதனுடைய பிளக்கும், மின்சார கொசு விரட்டியின் பிளக்கும் ஒரே போர்ட்டில் இணைக்கப்பட்ட நிலையில் கொசுவிரட்டியும் எரிந்து உருகி உள்ளது. இந்த தீ விபத்தில் அருகில் இருந்த அட்டைப்பெட்டியும் எரிந்துள்ளது. இவற்றில் இருந்து உண்டான நச்சுப்புகை வெளியேற ஜன்னல் ஏதும் இல்லாததால் , படுக்கை அறையில் புகை மண்டி 4 பேரின் உயிரும் தூக்கத்திலேயே பறிபோனது தெரியவந்தது. கருகிய மின்சாதன பொருட்களை பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச்சென்றனர்

வீட்டில் மின்சாதன பொருட்களை பயன் படுத்துவோர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சாதங்களை ஒரே பிளக் கோல்டரில் இணைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தும் மின்சாதன பழுது நீக்குனர், கொசுவிரட்டி மிஷின்களை தனி பிளக் கோல்டரில் வைக்க வேண்டும் என்றும் விலை குறைவான டவர் ஃபேன்களை வாங்கி பயன் படுத்தும் போது அவற்றின் காயில் அதிக மின் அழுத்தம் காரணமாக தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments