மரணித்தும் வாழும் விவசாயி.. கணவனின் கடைசி ஆசையை கடமையாக நிறைவேற்றிய மனைவி...! மரித்தாலும் பிறருக்கு பார்வையை வழங்கலாமே..

0 1836

மரணித்த பிறகு மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது தீயில் எரிந்து சாம்பலாகி போகும் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 75 விவசாயி ஒருவர்.

47 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவனின் இறப்பை மனதளவில் தாங்கிக் கொண்டு அவரது இறுதி ஆசையை நிறைவேற்றிய திருப்தியோடும், பிரிவை நினைத்து ஏங்கியும் அழும் இவர் தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சாந்தகுமாரி.!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலைச் சேர்ந்த 75 வயதான விவசாயி திருவேங்கடம், உடல் நலக்குறைவால் வெள்ளியன்று மாலையில் உயிரிழந்தார். இறப்பிற்கு பிறகு தனது கண்களை தானமாக வழங்க வேண்டும், உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்சிக்காக வழங்க வேண்டுமென குடும்பத்தினரிடம் விருப்பம் தெரிவித்து வந்துள்ளார் திருவேங்கடம். தனது நண்பரான லயன்ஸ் சங்க நிர்வாகி ஒருவரிடமும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார் திருவேங்கடம்.

இதனையடுத்து, இறப்பிற்கு பிறகு திருவேங்கடத்தின் கண்கள் 4 பேருக்கு பயனளிக்கும் வகையில் சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கும், உடல் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினர் குடும்பத்தினர். அதற்கு முன்பாக தங்களது முறைப்படி இறுதி சடங்குகளையும் செய்து முடித்தனர் குடும்பத்தினர்.

2020ம் ஆண்டில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார் திருவேங்கடம். அப்போது, மருத்துவ மாணவர்களிடம் ஏற்பட்ட பழக்கத்தால், உடல் மற்றும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர் குடும்பத்தினர்.

இறப்பிற்கு பிறகு 10 பேருக்காவது பயன்படட்டும் என விவசாயி திருவேங்கடம் அடிக்கடி சொல்லி வந்ததாக தெரிவித்த குடும்பத்தினர். மற்றவர்களும் கண்தானம் செய்ய முன் வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறப்பிற்கு பிறகும் வாழும் வகையிலும், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் கண்கள் உள்ளிட்ட உடலுறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments