மணலியில் மின்சாதனங்களிலிருந்து எழுந்த புகையால் மூச்சுத்திணறல்... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நான்கு பேர் உயிரிழப்பு
சென்னையை அடுத்த மணலியில் மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் எழுந்த புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி பெண் ஒருவரும் அவரது பேத்திகள் மூன்று பேரும் உயிரிழந்தனர்.
மணலி எம் எம் டி ஏ இரண்டாவது குறுக்குத் தெருவிலுள்ள உடையார் என்பவரது வீட்டில் காலை ஜன்னல் வழியே கரும்புகை வந்து கொண்டிருந்ததைக் கண்டு அக்கம்பக்கத்தினர் கதவைத் திறக்க முயன்றுள்ளனர்.
உள்ளே தாழிடப்பட்டிருந்ததால் போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் வரவழைக்கப்பட்டு கதவை உடைத்து பார்த்தபோது, உடையாரின் தாய் 62 வயதான சந்தான லட்சுமி, அவரது பேத்திகள் 8 வயதான பிரியா, பவித்ரா மற்றும் 10 வயதான சந்தியா ஆகியோர் சிறு சிறு தீக்காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
தடய அறிவியல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அங்கிருந்த டவர் ஃபேனில் ஷார்ட் சர்க்கியூட் கோளாறு ஏற்பட்டு தீப்பற்றி, அடுத்தடுத்த மின்சாதனங்களுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Comments