மேல்பாதி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே மீண்டும் மோதல்... பதற்றம் நிலவுவதால் அதிரடிப்படை போலீசார் குவிப்பு
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திரெளபதி அம்மன் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே இரு பிரிவினரிடையே தகராறு நீடித்து வரும் நிலையில், முதியவர் ஒருவரை கிண்டல் செய்து தாக்கியதாகக் கூறி மீண்டும் தகராறு ஏற்பட்டதால், ஒரு சமூகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி அச்சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் அதிரடி படை போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments