சோளக்காட்டு திகில்..! தானாக ஓடிய டிராக்டர் பெண் மீது ஏறி இறங்கியது..! 5 ரவுண்ட் சுற்றி நசுக்கியது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சோளக்காட்டிற்குள் ஆஃப் செய்யாமல் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்று தானாக ஓடி 5 முறை சுற்றி வந்தது. அப்போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் நசுங்கி பலியானார்.
சோளக்காட்டுக்குள் தானாக ஓடிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான பெண்ணின் உறவினர்களது கதறல் தான் இவை..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சின்னகோட்டிமுளை கிராமத்தில் சம்பத் என்பவரின் விளை நிலத்தில் சோளம் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாய கூலி தொழிலாளிகள் சோளக்கருது உடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சம்பத் சோளக்கருது தட்டைகளை ஏற்றுவதற்காக டிராக்டரை கொண்டு வந்து நிறுத்தினார். டிராக்டரை ஆப் செய்யாமல நிறுத்தி விட்டு மரத்துக்கு அடியில் சென்று அமர்ந்திருந்த போது திடீரென நகர்ந்த டிராக்டர் தானாக ஓடத் துவங்கியது
சோளக்காட்டில் விவசாய பணியில் இருந்தவர்கள் மீது டிராக்டர் மோதியது. இதில் அன்பழகி என்ற பெண் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நசுங்கினார். டிராக்டர் நிற்காமல் 5 முறை சுற்றி வட்டமிட்டது. டிராக்டரை நிறுத்துவதற்காக அதில் ஏற முயன்ற சம்பத்தின் லுங்கி பக்கவாட்டு கம்பியில் சிக்கிக் கொண்டதால் தவறி விழுந்த அவர் முன் சக்கரத்தில் சிக்கி காயம் அடைந்தார்
விவசாய பணிகளில் ஈடுபட்ட பெண்கள் அலறியடித்து ஓடினர். டிராக்டர் புகுந்து அழித்ததால் சோளக்காட்டின் ஒரு பகுதி வட்டமாக பாதை போல உருமாறியது
சோளக்குவியலில் சிக்கி ஒருவழியாக டிராக்டர் நின்ற பின்னர் பலியான அன்பழகியின் சடலத்தை மீட்டனர். தலை நசுங்கி காணப்பட்ட சடலத்தை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர்.
காயம் அடைந்த சம்பத், அமுதா, கோபிகா ஆகியோர் சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கம்மாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சோளத்தட்டைகளை டிராக்டரின் டிரய்லரில் போடச்சென்றவர்களின் கை தவறுதலாக பட்டு கியர் விழுந்து டிராக்டர் ஓடத்தொடங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Comments