நர்சை நாடிச்சென்ற Ex சுகாதாரத்துறை அதிகாரி பசியால் பலியான உயிர்கள்..! உழைப்பில்லா தன்மானம் பயன்தராது..!
முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் , தனது குடும்பத்தினரை பிரிந்து நர்சு ஒருவருடன் சென்று விட்ட நிலையில், 22 வருடமாக இருப்பதை விற்று சாப்பிட்ட மனைவி , மகன் மற்றும் மகள் வறுமையின் பிடியில் சிக்கி தண்ணீர் வாங்க கூட பணமில்லாமல் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது.
மதுரை தாசில்தார் நகரில் உள்ள சுகாதாரத்துறை முன்னாள் அதிகாரி பாண்டியன் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாக போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர். அண்ணாநகர் போலீஸார் அங்குச் சென்று பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளேச் சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆணின் சடலமும், தரையில் 2 பெண்கள் சடலமும் கிடந்தது.
இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என்ற நிலையில் சடலங்கள் மிகவும் அழுகியிருந்ததால் துணியில் மூட்டை போல கட்டி சடலத்தை போலீஸார் மீட்டனர். விசாரணையில், இறந்தது பாண்டியனின் மனைவி வாசுகி, 45 வயதான அவரது மகள் உமாதேவி, 42 வயதான மகன் கோதண்டபாணி என்பது தெரிய வந்தது.
அரசு அதிகாரி ஒருவரின் குடும்பம் ஏன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கினர் போலீஸார். அப்போது, பாண்டியன் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பே வாசுகியை பிரிந்து நர்ஸ் ஒருவருடன் பழனி அருகே ஒரு கிராமத்தில் குடும்பம் நடத்தி வருவது தெரிய வந்தது.
பாண்டியன் பிரிந்து சென்றது முதலே அந்த குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இறந்த கோதண்டபாணி பி.எஸ்.சி கம்பியூட்டர் சயின்ஸ்ம், உமாதேவி எம்.எஸ்.சி கணிதம் பட்டதாரிகளாக இருந்தும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லையென கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினருடன் பேசாமலும், உறவினர்களுடன் தொடர்பிலும் இல்லாமலும் இவர்கள் 3 பேருமே தனி உலகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டில் உள்ள நகையில் துவங்கி வீட்டு உபயோக பொருட்கள் ஒவ்வொன்றாக விற்று 22 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
விற்பதற்கு எதுவும் இல்லாத நிலை ஏற்படவும், கடந்த சில மாதங்களாக உணவிற்கு வழியின்றி வறுமையின் கோர பிடிக்குள் சிக்கிக் கொண்டது குடும்பம். மின்கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளனர் குடும்பத்தினர்.
வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடிநீரை வாங்கி அதனையே உணவாக உட்கொண்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அது வாங்க பணமில்லையென கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் மற்றும் வறுமையின் கோரப்பிடியால் சிக்கிய 3 பேரும் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர் .
பழனியில் இருந்த பாண்டியனிடம் விபரங்களை கூறி போலீஸார் அழைத்து வந்தனர். ஆனால், அவரோ தன்னை 22 வருடங்களுக்கு முன்பே வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.
உழைப்பின்றி இருப்பதை விற்று சாப்பிட்டால் அரசகுடும்பமே ஆண்டியாகும் போது அரசு அதிகாரி குடும்பம் மட்டும் விதிவிலக்கா என்கின்றனர் காவல்துறையினர்.
Comments