புஹாரில சாப்பிட்டாங்களாம் ஆஸ்பத்திரில அட்மிட்டாம்.. பிரியாணியை கிளரிய அதிகாரிகள்..! கரப்பான் பூச்சிகள் ஓடியதால் பரபரப்பு

0 3856

தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள புஹாரி ஓட்டலில் சாப்பிட்ட இரு வேறு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்தனர்.

ஊரப்பாக்கம் புகாரி உணவகத்தில் உணவின் தரம் சரியில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்திய காட்சிகள் தான் இவை..!

தாம்பரம் அடுத்த வண்டலூர் , ஊரப்பாக்கத்தில் உள்ள பிரபல அசைவ உணவகமான புஹாரி ஹோட்டலுக்கு, கடந்த 13ம் தேதி மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் சாப்பிடச் சென்றுள்ளார். சிக்கன் நூடுல்ஸ், கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவுகளை வாங்கிச் சாப்பிட்டுள்ளனர்.

வீட்டுக்கு சென்ற பின்னர் நள்ளிரவு நேரத்தில் உணவு சாப்பிட்ட அனைவருக்கும் கடுமையான வயிற்றுவலி, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல் வரதராஜபுரத்தை சேர்ந்த காதர் பாஷா, குடும்பத்தினர் பிறந்த நாள் விருந்தாக புஹாரி உணவகத்தில் மட்டன் பிரியாணி, கிரில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, என உடல் நலம் பாதிக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது.

புகாரி உணவகத்தில் தரமற்ற சுகாதாரமற்ற நிலையில் தயாரிக்கப்பட்ட உணவை விற்பனை செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் செல்போன் வாயிலாக புகார் தெரிவித்த நிலையில், காஞ்சிபுரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மணிமாறன் தலைமையில் புஹாரி ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து கெட்டுப்போன சிக்கன் மட்டனை கைப்பற்றினர். குளிர்சாதனப்பெட்டி சுத்தமாக இருப்பதாக கருப்பு கவர் விரித்து மறைத்து வைத்திருந்த நிலையில் அதனை எடுத்து பார்த்த போது கரப்பான் பூச்சி ஒன்று ஓடுவதை கண்டு கடை உரிமையாளரை கடிந்து கொண்டனர்

பிரியாணியை கிண்டி கிளரி சிக்கன் தரமானது தானா ? என்று பார்த்த அதிகாரிகள், உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுகூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். உணவுகளின் ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகு ஹோட்டல் நிர்வாகத்தின் மீது தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments