கிராம சபையில் ஓங்கி ஒலித்த மாணவன் குரல்..! குடிக்க நல்ல தண்ணீர் வேணும்..!
சுத்தமான குடிநீர் வழங்காததால் தனக்கும் தன்னுடன் படிக்கின்ற மாணவர்களுக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிராமசபைக் கூட்டத்தில் ஆவேசமானார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்றது.
இதில் கங்கைகொண்டான் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் குமாரவேல் கூட்டத்தில் பேசிய போது, தாங்கள் வசிக்கும் கங்கைகொண்டான் பகுதியில் அருகே அரசின் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய மாணவன், அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தங்களது குடியிருப்பு பகுதியில் நேரடியாக திறந்து விடப்படுவதால் குடிநீர் மாசுபட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுவதாகவும், டைபாய்டு காய்ச்சல் அதிகம் பரவுவதாகவும் குற்றஞ்சாட்டினார்
தனக்கும், தனது சகோதரர், தனது நண்பன் ஆகியோருக்கும் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது என்ற மாணவர் சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது உள்ளாட்சி அமைப்பின் கடமை, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது கேன் குடிநீர் குடித்தால் சத்து கிடையாது என்று அவர் ஆவேசமாக பேசுவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்
தொடர்ந்து பேசிய ஊராட்சித்தலைவர் குடி நீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
Comments