கால் டாக்சியின் நம்பர் பிளேட்டை மாற்றி திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை கடத்த முயன்ற காதலன்
சென்னையில் கால் டாக்சியில் போலியான நம்பர் பிளேட்டை பொருத்தி இளம்பெண்ணை கடத்த முயன்றதாக அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.
திருவான்மியூரைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் பிரசாந்த் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பிரசாந்தின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை எனக் கூறி பவித்ரா அவரை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து பவித்ராவை கடத்திச் சென்று திருமணம் செய்ய முடிவு செய்த பிரசாந்த், அதற்காக கால்டாக்சி ஓட்டுநர் ஹனிபா என்பவரை அணுகியுள்ளார்.
காதலியை அழைத்துக் கொண்டு ரகசியமாக வெளியில் செல்ல இருப்பதாகவும், அதற்காக காரின் நம்பர் பிளேட்டை மாற்ற வேண்டும் என்றும் கூறிய பிசாந்த், இதற்காக நிறைய பணம் தருவதாகவும் ஹனிபாவிடம் ஆசை காட்டியதாக சொல்லப்படுகிறது.
இதற்கு சம்மதித்த ஹனீபா போலி நம்பர் பிளேட்டை பொருத்திக் கொண்டு பிரசாந்துடன் பவித்ரா பணியாற்றும் இடத்துக்குச் சென்றுள்ளனர்.
வேலை முடிந்து வெளியே வந்த பவித்ராவை அவர்கள் கடத்த முயன்ற அதே நேரத்தில், பவித்ராவை அழைத்துச் செல்வதற்காக அவரது தாயும் வந்துள்ளார்.
மகளை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றதைப் பார்த்து கூச்சலிட்ட பவித்ராவின் தாயை பிரசாந்த் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதற்குள் அங்கு கூடிய பொதுமக்கள் ஹனிபா வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அங்கிருந்த தப்பியோடிய பிரசாந்த்தையும் போலீசார் கைது செய்தனர்.
Comments