எலிக்காய்ச்சலால் பாதித்த 3 வயது குழந்தைக்கு வெறிநாய்க்கடி சிகிச்சை..? விசாரணை கோரும் உறவினர்கள்...!
அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியது அந்த குழந்தை. எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெறிநாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தந்தைக்கு முத்தம் கொடுத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் இந்த சிறுவன் தான், இறந்ததாக அரசு மருத்துவர்களால் கைவிடப்பட்டு உயிர் பிழைத்தவர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேரேக்கால் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தனிஷ்- ஷைனி தம்பதியர். இவர்களின் 3 வயது ஆண் குழந்தைக்கு கடந்த மாதம் 24-ம் தேதி காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு ஏற்படவே அருகிலுள்ள எம்.பி குமார் என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள், நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் என்ற மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.
அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்களோ குழந்தையை நாய் கடித்திருப்பதாகவும், வெறிநாய் கடிக்கான சிகிச்சை ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளதாக கூறி அங்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர் பெற்றோர்.
அரசு மருத்துவமனைக்கு சென்ற போது குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அவனை தனிமைப்படுத்தி வெறிநாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. எந்த பரிசோதனையும் செய்யாமல் தனியார் மருத்துவமனையின் பரிந்துரையை வைத்தே இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர் பெற்றோர்.
ஒரு கட்டத்தில் குழந்தை பிழைக்க மாட்டான் என தெரிவித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாகவே எங்களிடம் தெரிவித்தனர் என குற்றச்சாட்டினர் பெற்றோர்.
குழந்தையின் இறப்பு ரிப்போர்ட்டை தயாரிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென குழந்தையின் கைகளில் அசைவு இருப்பதை பார்த்துள்ளார் உறவினர் ஒருவர். இதனையடுத்து திருவனந்த புரத்தில் உள்ள நிம்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் மூலமாக குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது.
அங்கு உடனடியாக சிகிச்சை துவங்கப்பட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி பூரண குணமடைந்தது அந்த குழந்தை. நிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே அதிர்ச்சியடைந்தனர் பெற்றோர்.
நாகர்கோவிலில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சலுக்கு நாய்க்கடி சிகிச்சை அளித்ததே தனது குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என தெரிவித்தனர் பெற்றோர்.
இதுகுறித்து விளக்கமளித்த ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகமோ, குழந்தையை நாய் கடித்து விட்டதாக பெற்றோர் தான் தெரிவித்தனர். எங்களது பரிசோதனையில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் அதற்கு சிகிச்சை பெறவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் எனத் தெரிவித்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகமும் இதுகுறித்து அளித்த விளக்கத்தில், குழந்தைக்கு மூளைக்காய்ச்சலுக்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வந்ததாகவும், வெறி நாய்கடிக்கான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பெற்றோரின் குற்றச்சாட்டும் அதற்கான விளக்கமும் வேறுவேறாக இருப்பதால் அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே குழந்தையின் உறவினர்கள் கோரிக்கையாக உள்ளது.
Comments