இனி மாடுகள் சாலையில் சுற்றினால் மாநகராட்சி தூக்கும்..! அதிரடி ஆக்சனில் ஆணையர்..! மாடு வளர்ப்போர் சொல்வது என்ன ?

0 4090

சென்னை அரும்பாக்கத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமியை சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று விரட்டி விரட்டி முட்டிய சம்பவத்தை தொடர்ந்து, சென்னை வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை  மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கத் தொடங்கினர். அதை பார்வையிடச்சென்ற ஆணையர் ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு மாடு வளர்ப்போர் வாக்குவாதம் செய்தனர்.

சென்னை அரும்பக்கத்தில் பசுமாடு ஒன்று விரட்டி விரட்டி முட்டியதில் பள்ளிச் சிறுமி ஒருவர் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பியுள்ளார். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது பற்றி நீண்ட காலமாக புகார்கள் உள்ள நிலையில் சிறுமி காயமுற்ற சம்பவத்துக்குப் பின் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த களமிறங்கி உள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி.

கடந்த 10ந்தேதியில் இருந்து மட்டும் சென்னையில் பல்வேறு இடங்களில் 76 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விடுவிக்க மாட்டுக்கு 2 நாட்கள் பராமரிப்பு கட்டணத்துடன் ரூ 2000 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது.

மாடுகள் வளர்ப்போர் ஒரு மாட்டுக்கு 32 சதுர அடி இடம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதில் தான் மாடுகளை கட்டி வளர்க்க வேண்டும், சாலைகளில் அவிழ்த்துவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர் அதிகாரிகள்.

இதற்கிடையே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே சாலைகளில் சுற்றித்திருந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் மாடு பிடிக்கும் வண்டியில் ஏற்றினர். இந்த பணியை ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சுற்றி வளைத்த மாடு உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

லாரி மோதி 4 பேர் செத்துட்டாங்கன்னா ரோட்டுல லாரியே ஓடக்கூடாதுன்னு சொல்வீங்களா ? என்று மாடு வளர்ப்போர் கேள்வி எழுப்பினர். மாடுகளை அவிழ்த்து விட்டதோடு சூழ்ந்து கொண்டு வாக்குவாதமும் செய்தவர்களிடம் மாடுகள் சாலையில் திரிவதால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் குறித்து ஆணையர் ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்

சென்னையில் 15 வாகனங்கள் மூலம் மாடுகளை பிடித்து வருவதாகவும், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அபராத தொகையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், ஒரே மாடு 3 வது முறையாக பிடிபட்டால் புளூகிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments