இரும்பு பெட்டியில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை! 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!! மீண்டும் புழலில் செந்தில் பாலாஜி!
செந்தில் பாலாஜி வழக்கில் மூவாயிரம் முதல் நாலாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற்று கடந்த 7-ஆம் தேதி செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்தனர் அமலாக்கத்துறையினர்.
சென்னை சாஸ்திரி பவனின் 3-வது தளத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி 300-க்கும் அதிகமான கேள்விகளுக்கு செந்தில் பாலாஜியிடம் பதில் பெற்றனர். இவற்றின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் பணியை துணை இயக்குனர் கார்த்திக் தசாரி தலைமையிலான அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றம் அனுமதித்த கஸ்டடி காலம் முடிந்ததன் பேரில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இரு புறமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு வர, இளம் பர்பிள் நிறச் சட்டையும் கருப்பு பேன்ட்டும் அணிந்திருந்த செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் துன்புறுத்தினார்களா என்று நீதிபதி அல்லி கேட்டார். அதற்கு இல்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கில் 3000 முதல் 4000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை இரும்பு டிரங்க் பெட்டியில் எடுத்துச் சென்று தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயர் மட்டுமே முக்கியமாக இடம் பெற்றிருப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் பேரில் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அமலாக்கத்துறையினர் கஸ்டடி எடுக்கும் முன் இருந்ததைப் போலவே, சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டு இருப்பதாக புழல் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
செந்தில் பாலாஜி தரப்பில் வரும் 16-ஆம் தேதிக்குப் பின்னர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
Comments