சாலையில் 4 உயிர்களை நசுக்கிய அதிவேக டாரஸ் லாரி..! குறுக்கே புகுந்த மாணவர்களால் விபரீதம்
மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் சாலைவிதிகளை மதிக்காமல் பைக்குடன் சாலையின் குறுக்கே திடீரென்று புகுந்த கல்லூரி மாணவர்களால் , ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டாரஸ் லாரி ஏறி இறங்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
அதிவேக பைக்கை திருக்கிட்டு இருக்காரே... இந்த தம்பியின் அவசரம் தான் இப்படி ஒரு கோர விபத்து நிகழ காரணமாகிவிட்டது என்கின்றனர் போக்குவரத்து புலானய்வு போலீசார்..!
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொத்தேரியில் சிக்னல் முறையாக செயல்படாததால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் , சர்வீஸ் சாலையில் இருந்து மெல்ல மெல்ல சாலைக்குள் வந்து வாகனங்களை நிறுத்தச்செய்து சாலையை கடப்பது வழக்கம்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர் கார்த்திக் தனது நண்பர் யஷ்வந்துடன் , வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், யமஹா எப் இசட் வாகனத்தை ஓட்டிக் கொண்டு வேகமாக பொத்தேரி சிக்னல் சாலையை கடக்க முயன்றதாகவும், அப்போது விழுதமங்களம் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி கருங்கல் ஜல்லி ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி ஒன்று பைக்கில் இருந்த இருவர் மீது பயங்கரமாக மோதியதாகவும் தெரிகிறது.
இதன் பின் ஓட்டுனர் கட்டுப்பட்டை இழந்த அந்த லாரி தறிகெட்டு ஓடி மேலும் சிலர் மீது ஏறி இறங்கி சாலையில் உள்ள தடுப்புச்சுவரை தாண்டி அங்கிருந்த மரம் சிக்னல் கம்பம் உள்பட அனைத்தையும் உடைத்து கொண்டு சிக்னல் கம்பத்தில் சிக்கி முன் பக்க சக்கரம் பஞ்சரானதால் எதிர்புற சாலையில் நின்றது
இந்த கோர விபத்தில் கார்த்திக், ஜஸ்வந்த், மகளை கல்லூரியில் விட்டுவிட்டு வீடுதிரும்பிய இசை ஆசிரியர் சைமன், பொத்தேரியை சேர்ந்த பவானி ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே டிப்பர் லாரியில் சிக்கி தலை மற்றும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்
பார்த்தசாரதி என்பவர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்கு காரணமான லாரி ஈரோட்டை ச்சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஓட்டுனர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே போக்குவரத்து போலீசார் இந்த பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபடுவதில்லை என்றும் சிக்னல் முறையாக செயல்படாததே விபத்துக்கு காரணம் என்றும் கூறி விபத்தில் பலியான பவானியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவரை அப்புறப்படுத்த முயன்ற காவல்துறையினரிடம் மக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விபத்தில் பலியான 4 பேரது சடலங்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்
டாரஸ் லாரிகளில் அதிக அளவு பாரம் ஏற்றிக் கொண்டு அதிவேகத்தில் செல்வதும் இது போன்ற விபத்துக்கள் நிகழ காரணமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டினர்.
Comments