சா'தீ'க்கு தீணிபோடும் ரீல்ஸ்.. மாணவனை வீடு புகுந்து வெட்டிய 6 மாணவர்கள் கைது..!

0 4765

பெட்ரோல் பாம் தயாரித்து ரீல்ஸ் செய்த வழக்கில், படிக்கின்ற மாணவர் என்று நீதிபதியால் இரக்கப்பட்டு பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவன், மறுநாளே உடன் படிக்கும் 5 மாணவர்களை அழைத்துச்சென்று  நன்றாக படிக்கும் மாணவரை, வீடு புகுந்து வெட்டியதாக, சாதிய வன்கொடுமை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களிடையே சாதியை வளர்க்கும் ரீல்ஸ் கலாச்சாரத்தின் விபரீத முகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....

பெட்ரோல் பாம் தயாரித்து அதனை சுவற்றில் வீசி எறிந்து தங்கள் சாதிப்பெருமையை பேசும் வீடியோ வெளியிட்ட வழக்கில் பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது பள்ளி மாணவரின் எதிர்காலம் கருதி அவரை மட்டும் பள்ளியில் கொண்டு விடுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவனின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் ரீல்ஸ் மாணவர் தலைமையிலான 6 பேர் கொண்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் சின்னதுரை , நன்றாக படிக்க கூடிய நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், தாய் பராமரிப்பில் வளர்ந்த சின்னத்துரை தனது தாயிடம் கூட தெரிவிக்காமல், சென்னைக்கு புறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து தாய் விசாரித்த போது, பள்ளியில் சில மாணவர்கள் கோஷ்டி சேர்ந்து கொண்டு சாதிரீதியாக தன்னை அடக்கி ஒடுக்குவதாகவும், எடுபிடி வேலைகளை செய்யச்சொல்லி அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னால் நிம்மதியாக படிக்க இயலவில்லை என்றும் கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து சின்னத்துரையின் தாய் தனது மகனுடன் சென்று வள்ளியூர் டி.எஸ்.பியிடமும் , சின்னதுரை படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் தனது மகனுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்துள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தை ஏற்று சின்னதுரை மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மஆணவர்களை பெற்றொர்களை அழைத்துவரக்கூறிய நிலையில், போலீசார் மாணவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரீல்ஸ் மாணவர் தலைமையிலான கும்பல், சின்னத்துரை மீது இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியதாகவும் அவரது தங்கை தடுத்து சத்தமிட்டதால் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கும் போலீசார் பலத்த காயம் அடைந்த சின்னத்துரைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே சாதிய வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ரீல்ஸ் மாணவர் உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் நெருங்கிய உறவினர்கள் திமுக மற்றும் மதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருப்பதால், மாணவர்கள் மீது போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று சின்னத்துரையின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அதே நேரத்தில் ரீல்ஸ் செய்வதாக கூறி, ஒவ்வொரு சாதி இளைஞர்களும் தங்கள் சாதிப்பெருமைகளை தூக்கிப்பிடித்து வருவதால், இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இசையமைய்யாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments