இந்தியா பற்றிய பேச்சு குறித்து அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்.. ஒரு காலத்தில் இருந்த எண்ணம் பற்றி தாம் பேசியதாக அறிக்கை.. !!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது இந்தியா என்றால் வடஇந்தியா தான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார் என்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூறி இருந்தது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சரான எ.வ. வேலு விளக்கமளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிகழ்வில் தாம் பேசிய போது இந்தியா என்றால் ஏதோ வடக்கே இருக்கிற ஊர், நம் ஊர் தமிழ்நாடுதான் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது என்றும், அந்த நிலை தற்போது மாறி உள்ளது என்றும் கூறியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவைக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது என்பது எப்படி தவறான கருத்தாக இருக்க முடியும் என்றும் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், எ.வ. வேலுவின் கருத்து தவறாக மேற்கோள் காட்டப்பட்டு இருப்பதாக கூறியுள்ள டி.ஆர். பாலு, எனவே பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சில் இருந்த சம்பந்தப்பட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments