சிறுமியை ஆக்ரோஷமாக தாக்கிய மாடுகள்...மாட்டின் திடீர் சீற்றத்திற்கு காரணம் என்ன...?

0 4980

சாலையில் சென்ற போது மாடு முட்டுத் தள்ளிய சிறுமிக்கு தலையில் 6 தையல்கள் போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாட்டை சாலையில் அவிழ்த்து விட்டு கேட்பாரின்றி திரிய விட்ட உரிமையாளருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி முடிந்து தாயோடும், தம்பியோடும் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த சிறுமியை நீண்ட கொம்புகள் கொண்ட பசு மாடு ஒன்று திரும்பத் திரும்பத் தாக்குதல் நடத்திய காட்சிகள் தான் இவை.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஹர்ஷின் பானுவின் மகள் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். புதன் மாலை பள்ளி முடிந்து பிறகு மகன், மகளுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் ஹர்ஷின் பானு.

இளங்கோ நகர் பகுதியில் கன்றுடன் சென்று கொண்டிருந்த பசு ஒன்று திடீரென திரும்பி சிறுமியை முட்டித் தூக்கி வீசியது. கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் தொடர்ந்து தாக்கியது.

ஹர்ஷின் பானு உதவிக் கேட்டு கூச்சலிட்டுக் கொண்டே கற்களை எடுத்து வீசியும் மாடு சற்றும் அசரவில்லை. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மாட்டினை கற்களை வீசியும், கம்பாலும் விரட்டினர்.

மாடு சிறிது நகர்ந்ததும் இளைஞர் ஒருவர் சிறுமியை மீட்க முயன்ற போது, திரும்பி வந்து சிறுமியை ஆக்ரோஷமாக தாக்கியது மாடு. இதனால், அந்த இளைஞரும் பின்வாங்க, பனியனோடு வந்த மற்றொருவர் கம்பால் மாட்டை அடித்து விரட்டிய பிறகே சிறுமி மீட்கப்பட்டார்.

சிறுமியின் தலை மற்றும் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாட்டின் உரிமையாளரான விவேக் மீது கவனக்குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் வீட்டில் வளர்க்கும் விலங்கினால் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அரும்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதே நேரம், தங்களைக் கடந்து சென்ற கன்றுக்குட்டியை நோக்கி சிறுமியின் தம்பி கையை நீட்டி சத்தம் போட்ட பிறகே மாடு தாக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments