அபேஸ் அண்ணனால் பிச்சை எடுத்த தங்கை.. ஐ.டி. பெண் ஊழியர் போராட்டம்..!
தர்மபுரியில் , கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்று ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர், தனது அண்ணனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பாக அமர்ந்து எவர்சில்வர் தட்டுடன் பிச்சை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழிப்போடு இருங்கள் பெண்களே...
யாரையும் நம்பாதீர்கள்.... நம்பி உங்கள் பணத்தை கொடுக்காதீர்கள்... முக்கியமாக உடன்பிறப்புகளை நம்பினால் இதுவே நிலைமை..! என்ற வாசகம் அடங்கிய பதாகையை மாட்டிவிட்டு கையை உயர்த்திய படி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தும் இவர் மும்பையில் வசிக்கும் ஐ.டி ஊழியர் விஜயபாரதி..!
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நாசம் கொட்டாய் பகுதியில் உள்ள அருண் பிரசாத் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அருகே அவரது சகோதரியான விஜயபாரதி கையில் தட்டுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் அந்தவழியாக சென்றவர்கள் விசாரித்த போது, தனக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, மும்பையில் வசிப்பதாகவும், உடன்பிறப்பு என்று நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து தவிப்பதாக ஆதங்கம் தெரிவித்தார்
கொரோனா காலத்தில் பெட்ரோல் பங்க் தொடங்க பண உதவி வேண்டும் என்று அண்ணன் அருண் பிரசாத் கேட்டதால், அவருக்கு முதலில் 25 லட்சம் ரூபாயை தான் கொடுத்ததாகவும், பின்னர் தனது மாமியாரிடம் இருந்து 15.5 லட்சம் ரூபாய் பணத்தை, ஆன் லைன் மூலம் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்த விஜய்பாரதி , வாங்கிய பணத்தை தரமறுத்து இழுத்தடித்த நிலையில், அருண் பிரசாத் மீது காவல்துறையில் புகார் அளித்ததால் 25 லட்சம் ரூபாயை திருப்பி தந்து விட்டதாகவும் , மீதம் உள்ள பணத்தை தரமறுப்பதால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். அண்ணனுக்கு பணம் வாங்கிக் கொடுத்ததால் தனது குடும்பத்தில் பிரச்சனை உருவாகி வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதனை சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்
இது தொடர்பாக அருண் பிரசாத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் விளக்கம் அளிக்க மறுத்து விட்டார். அண்ணன் தர வேண்டிய கடன் பணத்துக்காக , மும்பையில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்து பெண் ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments