இரவல் இதயம்.. இணைந்த காதல்.. குட்டி பையன் சிரிக்கிறான்..! உடல் உறுப்பு தானம் செய்வோம்..!
கோவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இருதயம் தானமாக கிடைத்ததால், சாகும் தருவாயில் இருந்து மீண்டு காதலியை திருமணம் செய்த கடலூர் இளைஞர், தற்போது மனைவி குழந்தைகளுடன் நலமுடன் இருப்பதாக கூறி உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.
கண்ணில் நுழைந்து இதயம் புகுவது காதல் என்று சொல்லக்கேட்டதுண்டு... காதல் புகுந்த இதயம் செயல் இழந்ததால் நிலை குலைந்த காதலனுக்கு, காதலி வார்த்தையால் நம்பிக்கை மருந்திட.. தானமாக கிடைத்த இதயத்தால் மறுபிறவி எடுத்து திருமணத்தில் இணைந்த நித்தியானந்தம் - வினிதா தம்பதியர் இவர்கள் தான்..!
கடலூர் மாவட்டம் பல்லவராய நத்தம் தொட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞரான நித்தியானந்தம், பாலூரை சேர்ந்த வினிதாவை கல்லூரி காலத்தில் காதலித்து வந்த நிலையில் , அப்போது 3 ஆம் ஆண்டு மாணவரான நித்தியானந்தம் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அரசு மருத்துவமனைகள் இனிமேல் அவ்வளவு தான் என்று கைவிட , காதலி வினிதாவிடம் தன்னை மறந்துவிட சொன்ன தோடு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு நித்தியானந்தம் கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த வினிதா, எப்படியும் குணப்படுத்தி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நித்தியானந்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள், இருதயம் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து வருவதாகவும் 75 சதவீதம் செயல் இழந்து விட்டதாகவும் உடனடியாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கோவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம், ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக கொண்டுவரப்பட்டு நித்தியனந்தத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டது. நித்தியானந்தம் உடல் நலம் பெற்று திரும்பியதும், கடினமான சூழலிலும் தன்னை விட்டு பிரிய மறுத்த வினிதாவை இரு வீட்டார் சம்மதத்துடன் மணவறையில் கரம் பிடித்தார் நித்தியானந்தம்.
தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது . உடல் உறுப்புத்தானத்தால் உயிர் பிழைத்ததோடு, மனதில் நின்ற காதலியே மனைவியாக கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளார் நித்தியானந்தம்
தங்களை வாழவைத்த உடல் உறுப்பு தானம் குறித்து நித்தியானந்தம் - வினிதா தம்பதி, தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மூளைச்சவடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்க்கப்பட்டால் தங்களை போல பல உயிர்கள் வாழும் என்கின்றனர்.
ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்... என்று நெருங்கி பழகியதும்.... இதைவிட பெஸ்டா கிடைத்தால் திருமணத்துக்கு நெருங்காமல் பிரிந்து செல்லும் காதல் ஜோடிகளுக்கு மத்தியில் , நோய் தந்த வலியிலும் இணைபிரியாமல் நம்பிக்கையுடன் காத்திருந்து, இப்படியும் சிலர் என்று வியக்க வைத்துள்ளனர் இந்த காதல் தம்பதியினர்.
Comments