செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு.! செப்.30க்குள் விசாரித்து முடிக்க உத்தரவு.! SIT விசாரிக்க உத்தரவிட நேரிடும் - உச்சநீதிமன்றம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற நேரிடும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணையை, 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு, ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையை முடித்து அறிக்கைத் தாக்கல் செய்ய, 6 மாத காலம் அவகாசம் வழங்குமாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், அசாதுதீன் அமனுல்லா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மொத்தம் 6 பிரிவினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் 2 பிரிவினரிடம் விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 3ஆவது பிரிவினரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனைவரையும் விசாரித்து முடிக்கவும், வங்கி கணக்குகளை ஆராயவும் 6 மாத அவகாசம் வேண்டும் என்றார். கூடுதல் அவகாசம் வழங்க மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை கொண்டு வழக்கை இழுத்தடிக்கப் பார்ப்பதாக, மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க வேண்டுமா ? வேண்டாமா? என்பதை மட்டுமே விசாரிப்பதாகவும், வழக்கின் வேறு கூடுதல் விவரங்கள் குறித்து விசாரிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தை மட்டும் கூடுதலாக சேர்த்தால் போதுமானதே தவிர, மீண்டும் முதலில் இருந்து வாக்குமூலம் பெற்று வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை தமிழ்நாடு டிஜிபி, உள்துறைச் செயலாளரிடம் கேட்டு அரை மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், அவர்கள் இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, செந்தில்பாலாஜி தொடர்புடைய வழக்கை விசாரிக்க 2 மாதங்களும், அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதமும் என, 3 மாதம் கால அவகாசம் வழங்கும் வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையேல், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் உத்தரவிட்டனர்.
Comments