புகைப்படம் எடுக்கக்கூட விட மாட்டீர்களா... ? ஜனாதிபதி விழாவில் சர்ச்சை...!

0 2175

கவுன் போட்டுக்கொண்டு 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் பட்டம் பெறுவது போல ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத நிலை சென்னை பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகே அவர்கள் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கண்களில் கனவுகளோடு கவுன் அணிந்து, கையில் வைத்திருக்கும் பேப்பரைக் கொண்டு காற்று வீசிக் கொண்டிருக்கும் இவர்கள் அனைவரும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் வழங்கிய விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றனர்.

பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெறுவோர் என 762 பேருக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், பட்டமளிப்பு விழா நடைபெற்ற அரங்கில் 500 பேர் மட்டுமே அமர முடியும் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

முனைவர் பட்டம் பெறுவோர் மற்றும் பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஆகியோர் தனித்தனி அறைகளில் காலை 8 மணிக்கு அமர வைக்கப்பட்டனர். அங்கு முறையான மின்விசிறி வசதி கூட இல்லாததால் அங்கிருந்தவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு குடியரசுத் தலைவர் முர்மு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அதன்பின்னர் அவர் புறப்பட்டுச் செல்ல மற்றவர்களோ, தங்களுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பட்டங்களை வழங்குவார் என நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், பட்டமளிப்பு விழா முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியானதும் காத்திருந்த மாணவ-மாணவிகளும் வந்திருந்த பெற்றோர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

கவுனுடன் பட்டம் பெறுவதை வீட்டில் மாட்டி வைப்பதே ஒரு பெருமை தான். அந்த பெருமைக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தால் அதற்கு கூட வழியில்லாமல் போய் விட்டதே என நினைத்தவர்கள் விழா ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனவே, விழா மேடைக்கு வந்து பல்கலைக்கழக துணை வேந்தருடன் பட்டம் பெறுவது போல புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு மேடைக்குச் சென்றனர்.

தங்கப்பதக்கம் பெற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ் உடன் தங்கப்பதக்கம் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினர் ஒரு சில மாணவிகள்.

தகுதியான நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் பல்கலைக்கழகத்தை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்தார் துணை வேந்தர் கவுரி.

அழைக்கப்பட்ட அனைவரையும் அமர வைக்கும் அளவிற்கான இடத்தை ஏன் தேர்வு செய்யவில்லை என மாணவர்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கும் துணை வேந்தர் கவுரி விளக்கம் அளித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமைகளை உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பிரமாண்டமாக நடைபெறவில்லை என்றாலும் பரவாயில்லை, படித்து முடித்தவர்களுக்கான குறைந்தபட்ச கவுரவத்தையாவது அளித்திருக்க வேண்டுமென தெரிவித்தனர் மாணவ-மாணவிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments