தலையணையால் அமுக்கி போலீஸ்காரர் கொலை ...! ஷிவானி சிக்கிய பின்னணி..
போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பால் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரை தலையனையால் அழுத்தி கொலை செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. சீரியஸ் ஆக்டிங் ஷிவானி சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 35 வயதான காவலர் ரமேஷ் . இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கு 8 வயது மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1ம்தேதி பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷ், மது அருந்தியுள்ளார். மது போதை தலைக்கு ஏறிய நிலையில் தள்ளாடி மயங்கி விழுந்த தனது கணவர் ரமேஷ் சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மனைவி ஷிவானி கண்ணீருடன் தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது வீட்டுக்கு வந்து செல்லும் டாக்ஸி ஓட்டுனர் ராமராவ் என்பவரும் சிலருக்கு ரமேஷ் உயிரிழப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மாரடைப்பு என்றால் மருத்துவர்கள் பரிசோதிக்கும் முன்பே, உறவினர்களுக்கு தகவல் சொல்லி அடக்கம் செய்ய அவசரம் காட்டுவது ஏன் ? என்று அங்கு வந்த சிலருக்கு சந்தேகம் எழுந்தது.
ஷிவானியின் கதறல் அழுகையால் உறவினர்களும் மதுவால் ஒரு குடும்பமே இப்படி ஆகி விட்டதே..! என்று பரிதாபம் கொண்டனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக , ரமேஷின் நெருங்கிய உறவினர்கள் சிலர், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ரமேஷின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்
இதில் சாவு செய்தி சொன்ன கால்டாக்ஸி ஓட்டுனர் ராமாராவ் முன்னுக்கு பின்னாக பதில் அளித்து போலீசிடம் உண்மையை கக்கினான். ரமேஷுக்கு குடிபழக்கம் இருந்த நிலையில் , அடிக்கடி வீட்டுக்கு வரும் கணவரின் நண்பரான ராமாராவுடன் , ஷிவானிக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்து ரமேஷ் அண்மையில் கடுமையாக கண்டித்துள்ளார். அதன் பின்னர் ராமாராவை வீட்டுக்குள் விடவில்லை.
இதையடுத்து தங்களது உறவுக்கு தடையாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட ஷிவானியும், ராமராவும் செல்போனில் பேசி திட்டமிட்டுள்ளனர். அதன் படி கடந்த 1 ந்தேதி காவலர் ரமேஷுக்கு மூக்குமுட்ட மது ஊற்றிக்கொடுத்த ஷிவானி, போதையில் மயங்கிய கணவரை படுக்கையில் கிடத்திவிட்டு, காதலன் ராமராவை செல்போனில் அழைத்துள்ளார்.பெண் தோழி நீலாவுடன் அங்கு வந்த ராமராவ், ஷிவானியுடன் சேர்ந்து காவலர் ரமேஷை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு மாரடைப்பால் பலியானதாக கூறி கண்ணீர் ஆக்டிங் போட்டது அம்பலமானது. மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காவலர் ரமேஷ் வீட்டுக்கு , ராமராவ் பெண் தோழியுடன் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து ஷிவானி, ராமாராவ் , தோழி நீலாஆகிய மூவரையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். ஆக்டிங் ஷிவானியின் விபரீத புத்தியால் அவரது இரு பெண் குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Comments