கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் குழந்தையின் தாய்!
சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. குழந்தைக்கு கட்டாய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் நிர்பந்தித்தினர் என்று தாய் குற்றம்சாட்டியுள்ள நிலையில், மருத்துவமனை தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை முகமது மஹீருக்கு தலையில் ரத்தக் கசிவு, இதயத்தில் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்ததன் காரணமாக கடந்த ஜூன் 25-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அன்றிரவே குழந்தைக்கு ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் 27-ம் தேதி கையில் வீக்கம் ஏற்பட்டு, விரல்கள் வீங்கி, அழுகத் தொடங்கியதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கை அகற்றப்பட்டது.
தொடர் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரழந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிஷா, மருத்துவர்கள் மீதும் டீன் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைக்கு எதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு உரிய பதில் இல்லை என்று கூறிய அஜிஷா, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் குழு தன்னை நிர்பந்தித்ததாகக் கூறினார்.
அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை கண்டிப்பாக இறந்து விடும் என்று தெரிந்தும், கை அகற்றப்பட்டது குறித்து தாம் தொடுத்த வழக்கை முடிப்பதற்காகவே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ள வைக்க அழுத்தம் கொடுத்தனர் என்றும் குற்றம்சாட்டினார்.
அஜிஷாவின் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம், குறை பிரசவத்தில் ஒன்றரை கிலோ எடையுடன் பிறந்த குழந்தையானது பாக்ட்ரீயா தொற்றினால் ரத்தத்தில் நச்சுகள் கலந்து பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாககத் தெரிவித்துள்ளது.
இதனிடையே உடற்கூராய்வு செய்யாமல் குழந்தையின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோர் கேட்டுக்கொண்டதால், உடல் ஒப்படைக்கப்பட்டது.
Comments