'தமிழன்' பட பாணியில் இலவச சட்ட மையம்..! வக்கீல்கள் டீமை களமிறக்கும் விஜய் மக்கள் இயக்கம் !!

0 3704

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் அணி துவங்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் வருவதைப் போல தமிழகம் முழுவதும் இலவச சட்ட மையங்கள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தில் ஏற்கனவே இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, விவசாயி அணி , வர்த்தக அணி போன்றவை உள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக துவங்கப்பட்டுள்ளது, வழக்கறிஞர் அணி.

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

அவர்களிடையே பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு முழுவதும் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்குமாறு விஜய் கூறி இருப்பதாக தெரிவித்தார். இதில் முதல் மையம் சென்னையில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் அமலாக்கத்தை கண்காணித்து அவற்றை பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தொகுத்து தலைமைக்கு தெரிவிக்குமாறு வழக்கறிஞர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பொதுநல வழக்குகள் பதிவு செய்யும் வழக்கறிஞர்களை கண்காணித்து மக்களின் உரிமையை காக்கும் வழக்குகளில் மனுதாரராக தாங்களாகவே முன்வந்து இணைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்படும் வழக்குகளுக்கு சட்ட ஆலோசனை வழங்குமாறும் வழக்கறிஞர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

உறுப்பினர்களுக்கு அடிப்படை சட்டங்கள் பற்றியும் சமூக வலைதள பதிவுகள் மற்றும் அவற்றுக்கு தொடர்புடைய சைபர் கிரைம் வழக்குகள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கூட்டத்தில் வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments