கர்நாடகாவில் இருந்து உரிய காவிரி நீரை தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும் : இ.பி.எஸ்
முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பெங்களூரு சென்று அம்மாநில முதலமைச்சருடன் பேசி தமிழ்நாட்டிற்கான உரிய காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின்படி மாதாந்திர அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177 புள்ளி 25 டி.எம்.சி. நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜூன் 12-ல் வழக்கப்படி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டோம் எனத் தெரிவிக்கும் முதலமைச்சர், அந்தத் நீர் சாகுபடிக்கு போதுமானதா? கடைமடை வரை சென்று சேர்ந்ததா? என்பது பற்றி அறியாமல், தானும் ஒரு டெல்டாகாரன் என கூறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான 86 புள்ளி 380 டி.எம்.சி. நீரை விரைந்து பெற்று, டெல்டா மாவட்டங்களில் கருகும் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் நெற் பயிரை காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தவறும்பட்சத்தில் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் டெல்டா விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டத்தில் இறங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments