சட்டங்கள் கடுமையானால் விபத்தில் தப்பும் வில்லன்களின் ஸ்பீடு கொட்டம் அடங்கும்..! வெறும் ரூ.5,000 தான் அபராதமாம்
வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பும் நபர்கள் கைது செய்யப்பட்டால் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் என்பதால் அதனை கட்டிவிட்டு எளிதாக ஜாமீனில் சென்று விடுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், விபத்து வழக்குகளுக்கான சட்டபிரிவுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துக்கு உணவு வாங்க சென்ற இளைஞர் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதிவிட்டு தப்பிச்சென்றனர். விபத்தில் சிக்கியவரை யாரும் காப்பாற்ற முன்வராததால் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய இருவர் மீதும் விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற சட்டப்பிரிவு 304a, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதற்கான 134 ஆகிய சட்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் வெறும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு காவல் நிலைய ஜாமீனில் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகின்றது
அதேபோல் அரும்பாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிவிட்டு கிரேன் நிற்காமல் சென்ற நிலையில், மூதாட்டி உயிரிழந்தார். நான்கு நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்ட அந்த நபரும் இதே போல உடனடியாக பிணையில் சென்று விட்டார். வாகன விபத்து ஏற்படும் போது காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அனுப்பி வைப்பதும், காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதும் விபத்தை ஏற்படுத்தியவரின் கடமை என மோட்டார் வாகனச் சட்டம் சொல்வதாகவும், சம்பவ இடத்தில் உள்ள பொதுமக்கள் தாக்கும் சூழல் இருந்தால் மட்டுமே அதிகபட்சமாக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் சரணடையலாம் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.
மேற்கண்ட இரு வேறு சம்பவங்களிலும் கோல்டன் ஹவர்ஸ் என சொல்லப்படும் விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் உயிரை காப்பாற்றியிருக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிவேகத்திலும், கவனக்குறைவாலும் வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்துபவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தால் அவர் மீது உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்று 24 மணி நேரத்திற்கு பிறகு காவல்துறையிடம் சிக்கும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினால் அவர் விபத்தின் பொழுது குடிபோதையில் இருந்தாரா ? என்பதை கண்டுபிடிக்க முடியாது.
விபத்தில் சிக்கியவர்களை சாலையில் செல்பவர்கள் யாராவது மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினால் அவர்களுக்கு வெகுமதியாக மத்திய மாநில அரசுகள் தலா 5000 வீதம் மொத்தம் பத்தாயிரமாக வழங்கும் நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு காயம்பட்டவரை காப்பாற்றாமல் தப்பிச்சென்று அவர் உயிர் இழப்பதற்கு காரணமாகும் நபர்கள் மீது பதிவு செய்யப்படும் சட்ட பிரிவுகளை பிணையில் வர முடியாத சட்டப்பிரிவுகளாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களும், விபத்துக்களும் குறையும்!
Comments