வேலையைவிட்டு தூக்கினால் பெட்டிக்கடை வைப்பேன்....போக்குவரத்து காவல் ஆய்வாளர்
ஊத்துக்கோட்டையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நீதிமன்ற ஊழியருக்கு அபராதம் விதித்ததற்காக நீதிபதி ,தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு வரவழைத்து மணிகணக்கில் காத்திருக்க வைப்பதாக காவல் ஆய்வாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கரவாகனத்தில் வந்த ஊத்துக்கோட்டை நீதிமன்ற ஊழியரான அருள்குமார் என்பவரை தடுத்து நிறுத்தி 1000 ரூபாய் அபராதம் விதித்ததற்காக , அவரது தூண்டுதலின் பேரில் தன்னை நீதிபதி அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டும் ஊத்துக்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் இவர் தான்..!
தன்னை தினமும் , நீதிமன்றத்துக்கு அழைத்து நீதிபதி உள் நோக்கத்துடன் காத்திருக்க வைத்து , மார்க்கெட்டில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை என்று கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும், நீதிமன்ற ஊழியர் என்றால் ஹெல்மெட் போடாமல் வரலாமா? சட்டம் அனைவரும் பொது என்பது பொய்யா ? என்றும் முகனூலில் பதிவிட்ட மணிமாறன் வீடியோ வாயிலாகவும் கேள்வி எழுப்பி உள்ளார்
அதிகாரவர்க்கமாக இருக்க கூடிய அரசியல் வாதிகள், காவல்துறையினர், பத்திரிக்கைதுறையினர், வக்கீல்கள் தான் விதிகளை மீறி தவறு செய்வதாகவும் மணிமாறன் ஆதங்கப்பட்டார்
போலீஸ் வேலை செய்யும் ஆசையே போச்சி... சிங்கம் படத்தில் கூறுவது போல பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்துக்கொள்வேன் என்றார் மணிமாறன்
இது குறித்து விளக்கம் அளித்த நீதிமன்ற ஊழியர் அருள் குமார் , காவல் ஆய்வாளரை டியூட்டியை பார்க்கத்தான் நீதிபதி சொன்னதாகவும், அவர் பொறுப்பேற்ற பின்னர் வந்து பார்க்காததால் அவரை வந்து பார்க்க கூறியதாகவும் அருள்குமார் தெரிவித்தார்
Comments