அவதூறு வழக்கில் ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. !!
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மோடி என்ற பட்டப் பெயர் தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்துகளை எதிர்த்து பூரணேஷ் மோடி என்பவர் தொடுத்த வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீடு மீது உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனைக்கு விசாரணை நீதிமன்றம் உரிய காரணம் தெரிவிக்காததால் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு 1 நாள் குறைவாக தண்டனை தந்திருந்தாலும் ராகுல் தகுதி நீக்கத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார் என்றும் ராகுல் வழக்கில் அவரை எம்.பி.யாக தேர்வு செய்த தொகுதி மக்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பொது வாழ்வில் உள்ளவர்கள் கவனத்துடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments