கரூர், கோயம்புத்தூர், நாமக்கல் பரமத்தியில் ED ரெய்டு.! செந்தில்பாலாஜி உதவியாளர் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு.!

0 4145

கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு, நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கோயம்புத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில், நாமக்கல் பரமத்தி வேலூரிலும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் ரெய்டு நடைபெற்றது. 

கரூருக்கு காலை 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர், 4 வெவ்வேறு இடங்களில், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் மதுரை புறவழிச் சாலையில் உள்ள அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். சின்னாண்டான் கோவில் சாலையில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் எனும் வணிக நிறுவனம், அதன் உரிமையாளர் பிரகாஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது..

செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கரின் அடுக்குமாடி வீடு மற்றும் செங்குந்தபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது அவை பூட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பூட்டு பழுது பார்க்கும் நபரை அழைத்து வந்து, பூட்டை திறந்து உள்ளே சென்று சோதனையிட்டனர். இவை அனைத்தையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒளிப்பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 4 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற சோதனையில், 2 பைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

கோயம்புத்தூர் இராமநாதபுரம் பகுதியில், டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. வேற்று மாநிலங்களின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூரில், திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அருண் அசோசியேட் நிறுவனம் கரூரில் செந்தில் பாலாஜின் குடும்பத்தினருக்கு பங்களா கட்டி கொடுத்த நிறுவனம் என கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர் ராஜாஜி தெருவில் உள்ள டயர் மணி என்கிற காளியப்பன் வீட்டில் 12 பேர் கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவருக்கு சொந்தமான பழைய பைபாஸ் சாலையில் உள்ள அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்றது. இவர் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கிய வேடசந்தூர் வீரா சாமிநாதனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments