உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு.. அந்த பாடத் திட்டத்தை 90 சதவீத கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தொடங்கி விட்டதாக உயர்கல்வித்துறை தகவல்..!
தமிழகத்தில் உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த பாடத் திட்டத்தை 90 சதவீத கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தொடங்கி விட்டதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். அவர்கள் பொதுப் பாடத்திட்டத்தில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்ததாக தெரிகிறது.
குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறிய அவர்கள், விருப்ப பாடங்களை எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப் பாடத்திட்டத்துக்கு போதிய பாடவேளை நேரம் இல்லை என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், கிரெடிட் சிஸ்டத்தில் பிரச்சனை ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர். இளநிலை பாடத்திட்டத்தை விட முதுநிலை பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, 900 கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே பொது பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
Comments