கரூர், கோயம்புத்தூரில் அமலாக்கத்துறையினர் சோதனை.! செந்தில்பாலாஜி உதவியாளர் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு.!
கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு, நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில், ED அதிகாரிகள் ரெய்டு நடைபெற்று வருகிறது.
கரூருக்கு இன்று காலை 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர், 4 வெவ்வேறு இடங்களில், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் மதுரை புறவழிச் சாலையில் உள்ள அம்மாள் நகரில் உள்ள அவரது வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். சின்னாண்டான் கோவில் சாலையில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் எனும் வணிக நிறுவனம், அதன் உரிமையாளர் பிரகாஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் இராமநாதபுரம் பகுதியில், டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூரில், திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருண் அசோசியேட் நிறுவனம் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜின் குடும்பத்தினருக்கு பங்களா கட்டி கொடுத்த நிறுவனம் என கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜியின் சகோதரர், அவரது நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகளிலும், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
செந்தில்பாலாஜிக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர் எனக்கூறப்படும், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனின் வீடுகளில் நேற்று முற்பகல் முதல் இன்று அதிகாலை வரையில், 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கரூர் மற்றும் கோயம்புத்தூரில், அமலாத்துறையினரின் இன்றைய சோதனை நடைபெறுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கரின் அடுக்குமாடி வீட்டிற்கும், செங்குந்தபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்திற்கும், இன்று காலை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது, அவை பூட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பூட்டு பழுது பார்க்கும் நபரை அழைத்து வந்து, பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்றதாக சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒளிப்பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாலை ஐந்தேகால் மணியளவில், செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கரின் நிதிநிறுவன அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளில் ஒரு குழுவினர், அம்பாள் நகரில் உள்ள வீட்டிற்கு வந்து, 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
Comments