அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.80 கோடி மோசடி செய்து மகனுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி 80 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் மகனுடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
மதுராந்தகத்தைச் சேர்ந்த சற்குணபாய் என்பவர் அப்பகுதியில் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகநாதன் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஜெகநாதன் கடந்த 2018ம் ஆண்டு நகைச்சீட்டு தொடங்கியதால் ஏராளமானோர் அதில் சேர்ந்துள்ளனர்.
அவர்களுக்கு உரிய நேரத்தில் பணமும், நகையும் கொடுத்துள்ளார். பின்னர் ஏலச்சீட்டு தொடங்கி, அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பகுதி மக்கள் சுமார் 80 கோடி ரூபாய் கட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் வட்டி தராமல் இழுத்தடித்த ஜெகநாதன் தனது மகன் யுகேந்திரனுடன் கடந்த 3 மாதமாகத் தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 50க்கும் மேற்பட்டவர்கள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
Comments