வளையமாதேவியில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க என்.எல்.சி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வளையமாதேவியில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு என்.எல்.சி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயி முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு ஏக்கருக்கு 60 நெல் மூட்டைகள் வரும் என்பதால், 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மனுதாரர் தரப்பில் வழக்கஞர் கே.பாலு கோரிக்கை விடுத்தார்.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பிலும் தவறுகள் உள்ளதால் இழப்பீட்டுத் தொகையை 40,000 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்த நீதிபதி, ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் அதை வழங்க வேண்டும் என்றும் அறுவடைக்கு பின் நிலங்களை விவசாயிகள் ஒப்படைத்து விட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதைக் கேட்டு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு, நெல்லுக்குப் பதில் தக்காளி பயிரிட்டிருந்தால் கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும் என்றார்.
அதற்கு நீதிபதி, தக்காளி பயிரிட்டிருந்தால் அரசே கொள்முதல் செய்திருக்கும் என்று கூறினார். உடனே என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர், தக்காளிக்கு பதில் மாம்பழம் பயிரிட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதால் நீதிமன்ற அறையில் சிரிப்பலை ஏற்பட்டது.
Comments