மசினகுடி காட்டுக்குள்ள மிருகங்களிடம் சிக்குவதை விட இவர்களிடம் சிக்கினால்..! தப்பி வந்தவரின் திகில் வாக்குமூலம்
மசினகுடியில் குடும்பத்துடன் தங்கும் விடுதிக்கு சென்றவரை இரவில் வழிமறித்து வாகனத்துடன் அழைத்துச்சென்று வனத்துறை அலுவலகத்தில் சிறைவைத்த அதிகாரிகள், தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாய் வசூலித்ததாகவும், கூகுள் மேப் பார்த்து வழி தவறி வந்த கேரள இளைஞர்களிடம் தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 7 ஆயிரம் ரூபாய் வசூலித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
நாட்டுக்குள்ள மட்டுமில்ல... காட்டுக்குள்ளயும் தாங்கள் அபராத வசூலில் ராஜாக்கள் தான் என்பதை நிரூபித்த தமிழக வனத்துறை அதிகாரி இவர் தான்..!
தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலங்களில் முக்கியமானதான மசினகுடியில் தான் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து இப்படி ஒரு அடாவடி வசூலை வனத்துறை அதிகாரிகள் அரங்கேற்றி வருவதாக அவர்களால் பாதிக்கப்பட்ட பெங்களூருவின் மல்லேஸ்வரத்தை சேர்ந்த தொழில் அதிபர் சந்தீப் உதகை மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்
கடந்த ஏப்ரல் மாதம் 22ந்தேதி இரவு 9 மணி அளவில் பேக்கரியில் சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் தான் தங்கி இருந்த விடுதிக்கு தனது காரில் திரும்பிய போது வனத்துறை அதிகாரிகள் மடக்கியதாகவும், விசாரணை என்ற பெயரில் தன்னையும், தனது மனைவி மற்றும் சகோதரி ஆகியோரை காருடன் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அதிகாலை 3 மணிவரை வைத்து விசாரித்து விட்டு, வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக பொய் வழக்கு பதிவு செய்து ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாயை வசூலித்ததாகவும், மற்றொரு காரில் வந்த கேரளாவை சேர்ந்த 7 இளைஞர்கள் கொண்ட குழுவை இரவு முழுவதும் சிறைவைத்ததாகவும், கூகுள் மேப்பை பார்த்து வழி தவறி இந்த சாலையில் வந்து விட்டதாக கூறிய அவர்களிடம் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 7 ஆயிரம் ரூபாயை மட்டும் வசூலித்ததாகவும் குற்றஞ்சாட்டுகிறார் சந்தீப்
சாலையில் சென்ற தங்களுக்கு எதற்கு 10 ஆயிரம் அபராதம் என்று கேட்டு வனத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் பல முறை தொலைபேசி வாயிலாக புகார் அளித்தும் உரிய பதில் அளிக்கவில்லை என்று சந்தீப் குற்றஞ்சாட்டியுள்ளார்
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தாங்கள் அபராதம் விதித்ததற்கு உரிய ரசீது வழங்கி உள்ளதாகவும், இந்த அபராத பணம் முதுமலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நல நிதிக்கு சென்று விடும் என்றும் மசினகுடியில் இரவு 9 மணிக்கு மேல் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தனர். ஆனால் இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் மசினகுடியில் எங்கும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Comments