போலீஸ் பாதுகாப்புடன் விற்பனையாகும் தக்காளி..!

0 1437

தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வரும் தக்காளியை போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை செய்யும் நிலை சென்னையில் உருவாகி உள்ளது.

கடையை எப்போது திறப்பார்கள், தக்காளியை எப்போது தருவார்கள் என நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர் சென்னைவாசிகள்.

காலை 9.30 மணிக்கு திறக்கும் தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி முன்பு 6 மணி முதலே வரிசையில் காத்திருந்தனர் மக்கள். அங்கு தக்காளி பெட்டி பெட்டியாக வந்து இறங்கவும் அவர்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.

விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சென்னையில் பண்ணை பசுமை கடைகள், கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மற்றும் நியாய விலை கடைகள் என 500 இடங்களில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்த தக்காளியை வாங்குவதற்காக அதிகமானோர் வரிசையில் நின்றதால் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனாலும், கூட்டத்தில் புகுந்து எப்படியாவது தக்காளியை வாங்கி விட வேண்டுமென முண்டியடித்தவர்களை ஆங்காங்கே தடை போட்டு திருப்பி அனுப்பி வைத்தனர் போலீஸார். கூட்டம் அதிகமாகவே, கடை ஊழியர்களும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரிடம் நீயாவது தக்காளி வாங்கி தா என ஒரு பெண் கூற டென்சனான அந்த காவலரோ நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா என எகிறும் நிலை ஏற்பட்டது.

ஒரு கிலோ தக்காளிக்காக 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியதாக தெரிவித்த பெண்கள், தக்காளி இல்லாமல் எப்படி சமைக்க முடியுமென கேள்வி எழுப்பினர்.

வெளிமார்க்கெட்டில் தக்காளி விலையை குறைத்தால் அனைவருக்கும் சவுகரியமாக இருக்கும் என தெரிவித்தனர் பொதுமக்கள்.

இன்னலாக மாறி விட்ட தக்காளி விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இல்லத்தரசிகளின் கோரிக்கையாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments