மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியில் ராட்சத கிரேன் சரிந்து விபத்து.. தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு.. !!
மகாராஷ்டிராவில் தானே அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு தமிழர்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பலியாகினர்.
சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையில் வி.எஸ்.எல். எனும் கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நெடுஞ்சாலைகள், ரயில் பாலங்கள் மற்றும் பெரியக் கட்டடங்களுக்கான இரும்புத் தூண்களை நகர்த்த உதவும் ராட்சத கிரேனை தொழிலாளர்கள் இயக்கியபோது, கிரேன் சரிந்து விழுந்தது.
இதில் அந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரும் இறந்தனர். சந்தோஷின் உடல் இன்றிரவு விமானம் மூலம் சொந்த ஊர் எடுத்து வரப்பட உள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மராட்டிய மாநில அரசும் அறிவித்துள்ளது.
Comments