சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டர்.. காரை விட்டு மோதி போலீசாரை தாக்க முயன்றபோது அதிரடி.!

0 2881

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, வாகன தணிக்கையின்போது போலீசாரை, ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். தப்பியோடிய 2 ரவுடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்களுடன் அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஸ்கோடா ரேபிட் காரை மடக்க முயன்ற போது, நிற்காத அந்த கார், வந்த வேகத்தில் போலீஸ் ஜீப் மீது மோதி நின்றதாக கூறப்படுகிறது.

அப்போது காரில் இருந்து நான்கு பேர் பயங்கர ஆயூதங்களுடன் இறங்கி அரிவாளால் போலீசாரை சரமாரியாக தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

அதில் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டு விழுந்தது. அதனை தொடர்ந்து வேறு வழியின்றி ரவுடிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில் இரண்டு ரவுடிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு ரவுடிகள் தப்பியோடிவிட்டனர்.

என்கவுன்டர் செய்யப்பட்டவர்களில் ஒருவன் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் சுவாமி விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்கிற சோட்டா வினோத் என்பதும், மற்றொருவன், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது.

இதில் வினோத் மீது, 10 கொலைவழக்குகள் 16 கொலை முயற்சிகள் ,கட்டப்பஞ்சாயத்து கூட்டுக்கொல்லை முயற்சிகள், ஆள்கடத்தல் உள்ள 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

ரமேஷ் மீது 5 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சிகள், 8 அடிதடி வழக்குகள் என, 20க்கும் மேற்பட்ட வழக்குள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு ரவுடிகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பித்து போன மற்று இரண்டு குற்றவாளிகளையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடிகள் வெட்டியதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாநன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாலை நடந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் அதிகாலையில் பயங்கர ஆயுதங்களுடன் இந்த ரவுடி கும்பல் எதற்காக இப்பகுதிக்கு வரவேண்டும். யாரையாவது கொலை செய்யும் திட்டத்தோடு வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தப்பித்து சென்ற அந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும் என காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே, ஆதனூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணியை ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தர மறுத்ததால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்ததாகவும் மணிமங்கலம் போலீசார ஒரு வழக்கை பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ரவுடிகள் ஏழு பேர் ஏற்கனவே சரணடைந்திருந்த நிலையில் இந்த கும்பலின் தலைவனாக சோட்டா வினோத் செயல்பட்டு வந்துள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சோட்டா வினோத், அவனது கூட்டாளி ரமேஷ் உள்ளிட்டவர்களை தேடி வந்த நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments